மெல்போர்ன்: இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லின் வருகை காரணமாக சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது தொடர்பாக மனம் திறந்துள்ளார். அதில் இந்திய அணியில் தொடக்க வீரர்களின் பேட்டிங் வரிசை மட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்று கூறிய சஞ்சு சாம்சன், மற்ற அனைவரும் எந்த நேரத்திலும் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 97 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடரை போலவே சஞ்சு சாம்சன் நம்பர் 5 பேட்டிங் வரிசைக்கு தள்ளப்பட்டார். மிடில் ஆர்டரில் விளையாடி சஞ்சு சாம்சனுக்கு பெரிய அனுபவம் இல்லாததால், அவரை நீக்க கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தன.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது தொடர்பாக சஞ்சு சாம்சன் பேசுகையில், இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
இதற்கு முன்பாக வேறு ரோல்களிலும் பேட்டிங் ஆடி இருக்கிறேன். சில நேரங்களில் ஓபனிங் ஆடி இருக்கிறேன். அதேபோல் ஃபினிஷராகவும் விளையாடி இருக்கிறேன். தற்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளேன். இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களுக்கு மட்டுமே பேட்டிங் வரிசை நிரந்தரமானது.
மற்ற அத்தனை வீரர்களும் எந்த சூழலிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். அதற்காக எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி அனுபவம் இருப்பதால், விரைவில் டி20 கிரிக்கெட்டிலும் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று பார்க்கப்படுகிறது.