பிரிஸ்பேன்: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண சென்றுள்ளார். அவர் மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருக்கும் வீடியோ நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை அடுத்து சுப்மன் கில் சதம் அடிக்கப் போவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் காதலித்து வருவதாக சமூக வலை தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் பலமுறை இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்று இருக்கும்போது சாரா டெண்டல்கர் அந்த போட்டியை காண நேரில் வந்துள்ளார்.

சமீப காலமாக சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் சுமாராக ஆடி வருவது விமர்சனத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தார். அந்த தொடரில் மற்ற ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு முறை 30 ரன்களை தாண்டி இருந்தார். அதையும் அரைசதமாக மாற்ற முடியாமல் விக்கெட்டை இழந்து இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடிய சுப்மன் கில் அந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 31 மற்றும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது டெஸ்ட் போட்டி சராசரியும் 36.45 என்பதாகவே உள்ளது. சுப்மன் கில் திறன் அடிப்படையில் நல்ல பேட்ஸ்மேன் ஆக அறியப்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இந்த நிலையில்தான், சாரா டெண்டுல்கர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை காண காபா மைதானத்திற்கு நேரில் சென்றுள்ளார். இதை அடுத்து சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்கவே அவர் வந்துள்ளார் எனவும், சாரா வந்தால் சுப்மன் கில் நிச்சயம் சதம் அடிப்பார் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேடிக்கையாக கூறி வருகின்றனர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை வெளுத்து வாங்கியதால் ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தது.