தம்பி உங்களை டீமில் எடுக்க முடியாது.. நடராஜனை ஓரங்கட்டும் இந்திய அணி.. பரபர தகவல்
சிட்னி : சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் உமேஷ் யாதவ்வுக்கு பதில் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அவரை உத்தேச அணியில் சேர்த்தாலும், களமிறங்கும் அணியில் அவர் இடம் பெற மாட்டார் என இந்திய அணி வட்டாரம் கூறி வருகிறது.
அவருக்கு பதில் ஷர்துல் தாக்குர் தான் அணியில் இடம் பெறுவார் எனவும், அதற்கு காரணம் அவருக்கு உள்ளூர் போட்டி அனுபவம் அதிகம் எனவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

நடராஜன்
தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் பயிற்சியில் மட்டும் பந்து வீசும் கூடுதல் பந்துவீச்சாளராகவே சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் அவர் டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக பந்து வீசி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

உமேஷ் யாதவ்
அடுத்ததாக டெஸ்ட் அணியிலும் அவர் கூடுதல் பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டு காத்திருப்பில் இருந்தார். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த நிலையில், அவருக்கு பதில் நடராஜன் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்படுவார் என ஊடகங்கள் கூறி வருகின்றன.

டெஸ்ட் அறிமுகம்
ஒருநாள் போட்டி, டி20 போலவே டெஸ்ட் அணியிலும் நடராஜன் அறிமுகம் ஆகி தன் முத்திரையை பதிப்பார் என கருதப்பட்ட நிலையில், அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என தற்போது கூறப்படுகிறது.

முதல் தர போட்டிகள்
நடராஜன் 20 முதல் தர போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். அதில் 64 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க நான்கு நாள் போட்டிகளில் அதிகம் ஆடி இருக்க வேண்டும். அந்த வகையில் நடராஜனை விட கூடுதல் போட்டிகளில் ஆடி உள்ளார் ஷர்துல் தாக்குர்.

தாக்குர் அதிகம்
தாக்குர் 62 முதல் தர போட்டிகளில் 206 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மேலும், அவர் இந்தியா ஏ அணியில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் டெஸ்ட் சூழ்நிலையில் பந்து வீசிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வாய்ப்பு?
அப்போது அவர் காயம் காரணமாக அந்த டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீச முடியவில்லை. எனவே, அவருக்கு டெஸ்ட் அணியில் முன்னுரிமை அளிக்கப்படும். நடராஜன் டெஸ்ட் அணியில் பங்கேற்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications