விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து மிரட்டி இருக்கிறார். ஆனால், இதே சூர்யகுமார் தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டெஸ்ட் போட்டி போல ஆடி ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 13 பவுண்டரிகள் அடித்து 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து இந்தியா வென்றதில் மகிழ்ச்சி என்றாலும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். அவர் டி20 போட்டிகளில் ராஜாவாக இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பேட்டிங் ஆட வரவில்லை. எனினும், உலகக்கோப்பை அணியில் அவரை தேர்வு செய்தது இந்திய அணி. முதலில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறாமல் இருந்தார் சூர்யகுமார் யாதவ்.

ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் அணியில் ஆறாம் வரிசை பேட்ஸ்மேனாக இடம் பெற்றார் சூர்யகுமார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி 49 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சொதப்பினார்.
குறிப்பாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது ஆட வந்த சூர்யகுமார் யாதவ் ராகுல் இருக்கும் போது பவுண்டரி அடிக்க முயற்சி செய்யாமல் டெஸ்ட் போட்டி போல ஆடி 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து, பின் பவுலிங்கில் சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை நழுவ விட்டது.
அதனால், சூர்யகுமார் யாதவ் மீது கோபத்தில் இருந்த ரசிகர்கள், அவர் அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் கேப்டனாக சிறப்பாக ஆடி 190 ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்கள் குவித்த போதும் பெரும்பாலான ரசிகர்கள் அவரை பாராட்டவில்லை. ஆஸ்திரேலியா 208 ரன்கள் குவித்த நிலையில் சேஸிங்கில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் 9 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து 13 பவுண்டரிகள் அடித்து இருந்தார். ஒழுங்காக ஆட வேண்டிய உலகக்கோப்பையில் சொதப்பி விட்டு, டி20யில் 13 பவுண்டரி அடித்து என்ன ஆகப் போகிறது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 80, இஷான் கிஷன் 58, ரிங்கு சிங் 22 ரன்கள் குவித்தனர்.