தயவுசெஞ்சு டீம்ல எடுத்துருங்கண்ணா.. அன்று போன் போட்டு கெஞ்சினார் ரிங்கு சிங்.. என்ன நடந்தது?
கொல்கத்தா : இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபினிஷராக கலக்கிய ரிங்கு சிங், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அணியில் இடம் கேட்டு கெஞ்சிய சம்பவம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இளம் வீரர் ரிங்கு சிங் 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை அவர் வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் மட்டும் அவர் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து இருந்தார்.
ஆனால், அதற்கு முன் நான்கு ஆண்டுகள் அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெரிதாக வெளியில் தெரியாத வீரராக இருந்தார் ரிங்கு சிங். அவர் 2022இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்க வைக்கப்படவில்லை. அதனால், அவர் பெயர் ஐபிஎல் ஏலத்துக்கு வந்தது.

அதற்கு முந்தைய மூன்று ஆண்டு காலகட்டத்தில் ரிங்கு சிங்கிற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில் அவர் சொதப்பி இருந்தார். அதனால் தன்னை கொல்கத்தா அணி மீண்டும் ஏலத்தில் வாங்குமா? என்ற சந்தேகத்தில் இருந்தார் ரிங்கு சிங்.
எனவே, அந்த ஏலத்துக்கு முன் அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு தொலைபேசியில் அழைத்து பேசிய ரிங்கு சிங், "நான் இந்த முறை நன்றாக ஆடுகிறேன். என்னை தயவு செய்து அணியில் எடுத்து விடுங்கள் அண்ணா" எனக் கெஞ்சி கேட்டு இருக்கிறார்.
அபிஷேக் நாயர், ரிங்கு சிங் மீது பெரும் நம்பிக்கை வைத்து இருந்ததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உன்னை எப்போதும் கைவிடாது எனக் கூறி இருக்கிறார். அந்த ஆண்டு சொன்னது போலவே ரிங்கு சிங்கை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. 2022 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் ஆடி 174 ரன்கள் குவித்து 34 பேட்டிங் சராசரியுடன் தன் வார்த்தையை காப்பாற்றினார் ரிங்கு சிங்.
அடுத்து 2023 ஆம் ஆண்டிலும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து தன் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து அபிஷேக் நாயர் சமீபத்தில் தொலைக்காட்சி கிரிக்கெட் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications