கேன்பரா: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகக் கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, அணியில் பன்முகத் திறமை கொண்ட வீரர்களுக்கு, ஆல் - ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், தனது அதிரடி பேட்டிங்கால் 'பினிஷர்' எனப் பெயரெடுத்த ரிங்கு சிங் , தற்போது பந்துவீச்சிலும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, தனது மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி கம்பீரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, கேன்பரா வலைப்பயிற்சியில் அவர் பந்துவீசும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் ஆழத்தை உருவாக்கும் நோக்கில், பன்முகத் திறமை கொண்ட வீரர்களை அதிகம் நம்பியுள்ளது. இதன் காரணமாகவே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ரிங்கு சிங் மற்றும் ரியான் பராக் போன்ற பகுதி நேரப் பந்துவீச்சாளர்களும், அவர்களது ஆல்-ரவுண்ட் திறனுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வியூகம், அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக நடந்த வலைப்பயிற்சியில், ரிங்கு சிங் பந்துவீசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது அதிரடி பேட்டிங்கிற்காக அறியப்பட்ட அவர், வலது கை ஆஃப்-பிரேக் பந்துவீச்சாளராகவும் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் ஓரளவு விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். இந்திய டி20 அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், கேப்டனுக்குக் கூடுதல் பந்துவீச்சு தேர்வை வழங்கவும் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வளவு செய்தும் ரிங்கு சிங்கிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆல் ரவுண்டர்களாக சிவம் துபே மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருடன் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என நான்கு முழு நேர பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர்.
ரிங்கு சிங் இதற்கு முன்பும் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசியுள்ளார். 2024-ல் இலங்கைக்கு எதிராகத் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசியுள்ளார். அதில் வெறும் 3 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2023-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே பந்துவீசி, ராஸ்ஸி வான் டெர் டுசெனின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தனது பேட்டிங் மூலம் பல போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித் தந்த ரிங்கு சிங், தற்போது பந்துவீச்சிலும் கவனம் செலுத்துவது, இந்திய அணிக்குக் கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கௌதம் கம்பீரின் "ஆல்-ரவுண்டர்" வியூகத்திற்கு அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதையே காட்டுகிறது.