அடிலெய்டு: டிசம்பர் 8 ஆம் தேதியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விடவே நினைப்பார்கள். அந்த அளவுக்கு நேற்று (டிசம்பர் 8) மூன்று மோசமான தோல்விகளை இந்திய கிரிக்கெட் அணிகள் சந்தித்தன. ஆடவர் கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் அண்டர் 19 கிரிக்கெட் அணி என மூன்று அணிகளும் மோசமான தோல்விகளை சந்தித்தன.
இதில் இந்திய ஆடவர் அணியும், அண்டர் 19 அணியும் முக்கியமான போட்டிகளில் தோல்விகளை சந்தித்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி டிசம்பர் 6 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய ஆடவர் அணி மோசமாக பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டும் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிசம்பர் 8 அன்று அந்த இலக்கை 3.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய ஆடவர் அணிக்கு இது மோசமான தோல்வியாக அமைந்தது.
இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது.
ஜார்ஜியா வால் 101 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் குவித்தனர். அடுத்து ஆடிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
அடுத்து இந்திய அண்டர் 19 அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அண்டர் 19 அணியிடம் தோல்வி அடைந்தது. இது மிகவும் மோசமான தோல்வியாக இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அண்டர் 19 அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இது எளிதாக எட்டக்கூடிய இலக்காக இருந்த நிலையில் இந்திய அண்டர் 19 அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்படியாக மூன்று போட்டிகளில் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆடிய இந்திய அணிகள் வெற்றிக்கு அருகே கூட செல்லவில்லை என்பது தான் இதில் மோசமான விஷயமாக அமைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தை நிர்ணயிக்கப் போகும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வியும், அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் எளிய இலக்கை எட்ட முடியாமல் ஏற்பட்ட தோல்வியும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனையான நிகழ்வுகளாக அமைந்தன.