அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். இது அவரது எட்டாவது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். மேலும், இந்திய அணிக்கு எதிராக அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து, பகல் நேர டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்து, பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து என மூன்று விதமான பந்துகளில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து விசித்திரமான சாதனையை படைத்து இருக்கிறார் டிராவிஸ் ஹெட்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிவப்பு பந்தில் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இருந்தார். அடுத்து 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெள்ளைப் பந்தில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். தற்போது அடிலெய்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் சதம் அடித்து இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ரன் சேர்த்தது. துவக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களும், மார்னஸ் லாபுஷேன் 64 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அதன் பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார்.
3 சிக்ஸ் மற்றும் 14 ஃபோர் அடித்த ட்ராவிஸ் ஹெட் சதம் கடந்தார். இது அவரது அதிவேக பகல் - இரவு டெஸ்ட் போட்டி சதமாகவும் அமைந்தது. 111 பந்துகளில் அவர் சதம் அடித்து இந்த சாதனையை செய்தார். இதற்கு முன் 112 பந்துகளிலும், 125 பந்துகளிலும் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார் ட்ராவிஸ் ஹெட்.
தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்து இருக்கிறார். பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மூன்று சதங்களை ட்ராவிஸ் ஹெட் அடித்து இருக்கிறார். அந்த மூன்றுமே அதிவேக சதங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு எதிராக சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் ட்ராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிரான கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக கடைசி ஆறு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ட்ராவிஸ் ஹெட் எடுத்த ரன்கள் - 90 (163), 163 (174), 18 (27), 11 (13), 89 (101), 140 (141).