IND vs AUS: டாக்ஸி டிரைவரை வாயடைத்துப் போக வைத்த ஜெய்ஸ்வால், ஜுரல்.. ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அடிலெய்டில் ஊபர் டாக்ஸியில் பயணம் செய்துள்ளனர். தங்களது காரில் ஏறியது இந்திய வீரர்கள் என்பதை அறிந்த ஓட்டுநர், ஒரு கணம் வாயடைத்துப்போனார். இந்தக் சம்பவம் காரின் டேஷ்கேமில் பதிவாகி, இணையத்தில் பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்தாலும், களத்திற்கு வெளியே நடந்த ஒரு ஜாலியான சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய டி20 அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் அடிலெய்டு நகரில் ஊபர் டாக்ஸியில் பயணம் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வரும் இந்த வீடியோ, காரின் டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. அதில், ஓட்டுநர் தனது பயணிகளை ஏற்றிக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார். அப்போது, காரை நோக்கி வந்த மூவரையும் பார்த்தவுடன், அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதை உணர்ந்து, ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

சற்றும் எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியால், ஓட்டுநரின் முகத்தில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணா ஓட்டுநருக்கு அருகில் முன் இருக்கையிலும், ஜெய்ஸ்வால் மற்றும் ஜூரல் பின் இருக்கையிலும் அமர்ந்தனர். தனது காரில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பயணம் செய்வதை உணர்ந்த அந்த ஓட்டுநர், தனது ஆச்சரியத்தை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமைதியாகக் காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.
ஆனால், அவரது ஆரம்பகட்ட முகபாவனையே, அவர் எந்த அளவிற்கு ஆச்சரியத்தில் உறைந்து போனார் என்பதைத் தெளிவாகக் காட்டியது. சுவாரஸ்யமாக, இந்த மூன்று வீரர்களும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் சோகம், வெளியே ஜாலி
களத்திற்கு வெளியே இந்த ஜாலியான சம்பவம் நடந்திருந்தாலும், களத்தில் இந்திய அணிக்கு இந்தத் தொடர் ஒரு மோசமான கனவாகவே அமைந்துள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், "நாங்கள் போதுமான ரன்களை எடுத்திருந்தோம். ஆனால், சில கேட்ச்களைத் தவறவிடும்போது, இதுபோன்ற ஸ்கோரை வைத்துக் போட்டியை வெல்வது கடினம்" என்று குறிப்பிட்டார்.
கடும் போட்டி அழுத்தம் மற்றும் தொடர் தோல்விக்கு மத்தியில், இந்திய வீரர்கள் தங்களது எளிமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications