மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக தற்போது விளங்கி வருபவர் வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி, தற்போது டி20 நம்பர் ஒன் பவுலராக விளங்கி வருகிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு விஷயங்களை குறித்து பேசி உள்ளார். அதில் தோனியின் தீவிர ரசிகராக இருந்த தான், அவருக்கு எதிராக பந்து வீசிய நிகழ்வு குறித்து கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சிஎஸ்கே அணி தங்கி இருந்த ஹோட்டலுக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்கும் நடுவில் தான் என்னுடைய வீடு இருந்தது. இதனால் எப்போதெல்லாம் தோனி சிஎஸ்கே பேருந்தில் செல்கிறாரோ அப்போதெல்லாம் நான் அந்த பெருந்தை பின் தொடர்ந்து கொண்டே செல்வேன். அந்த நிலையிலிருந்து தோனிக்கே பந்து வீசும் ஒரு நிலைக்கு நான் வளர்ந்தேன்.
அது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சில சமயம் தோனிக்கு நான் நெருக்கடி கொடுத்து அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் பலமுறை அவர் என்னுடைய பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்து இருக்கிறார். அவர் அடிக்கும் போது பார்த்தால் நமது வாழ்க்கையே போச்சுடா என்று நினைக்கத் தோன்றும்.
டி20 கிரிக்கெட்டில் நான் கண்டவரை மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்றால் கெயில், விராட் கோலி போன்றவர்கள் தான். சமீபகாலமாக அபிஷேக் ஷர்மாவும் அந்த பட்டியில் இணைந்திருக்கிறார். தயவு செய்து நீங்கள் யாராவது அபிஷேக் ஷர்மாவை பார்த்தீர்கள் என்றால், பவுலர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ள சொல்லுங்கள்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது வேண்டுமானால் அவர் இப்படி விளையாடட்டும். ஆனால் சன்ரைசஸ்க்கு எதிராக அப்படி விளையாட வேண்டாம். கொல்கத்தா அணி என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியது. 2024 ஆம் ஆண்டு நாங்கள் கோப்பையை வென்றோம். அப்போது பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் ஒரு ஆட்டத்தில் 261 ரன்கள் விட்டுக் கொடுத்தோம்.
எங்கள் அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தும், நாங்கள் அவ்வளவு விட்டுக் கொடுத்தோம். அன்று இரவு ஷாருகானின் மேலாளர் இடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. ஷாருக்கான் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். உடனே நான் ஷாருக்கானின் அறைக்கு சென்றேன். அங்கு நானும் அவரும் ஒரு 40 நிமிடம் வரை பேசினோம்.
அப்போது நான் சில தவறை பந்துவீச்சில் செய்து விட்டேன் என்று கூறினேன். அதற்கு சாருக் கான் சொன்ன அறிவுரை எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. நீங்கள் எப்போதும் பந்துவீச்சில் மேஜிக் நிகழ வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள். அதை கைவிட்டு உங்களுடைய அடிப்படை விஷயங்களில் தீவிரமாக இருங்கள். ஒருவேளை அணி உங்களிடமிருந்து வெறும் சாதாரண பந்தை தான் எதிர்பார்க்குமே தவிர எப்போதும் நீங்கள் மேஜிக் பந்தை வீசுவீர்கள் என்று எதிர்பார்க்காது என்று அறிவுரை கூறினார். 2024 ஆம் ஆண்டு சீசனில் வருண் சக்கரவர்த்தி 15 போட்டியில் விளையாடிய 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.