மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி அபார சதம் விளாசி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் தங்களின் முதல் சதத்தை விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நிதிஷ் குமார் ரெட்டி தனது அபார ஆட்டத்தால் தலைகீழாக திருப்பியுள்ளார். என்னதான் ஆஸ்திரேலியா அணி 116 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும், இந்திய வீரர்கள் கடைசி வரை பிடிவாதமாக இருந்து போராடி இருக்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் அனைவருமே சோர்வடைந்துவிட்டனர்.

இதற்கு முதல் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டியின் சதம் அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே ஆஸ்திரேலியா மண்ணில் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்த 10 இந்திய வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் வினோ மன்கட் தனது முதல் சதம் அடித்து அசத்தினார். டாம் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி அந்த போட்டியில் வென்றாலும், வினோ மன்கட் 187 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 116 ரன்களை விளாசி கெத்து காட்டினார். இதன்பின் அதே ஆண்டு ஜனவரியில் நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விஜய் ஹசாரா 303 பந்துகளில் 116 ரன்களை விளாசி அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு அதுதான் முதல் சதமாக அமைந்தது. தொடர்ந்து 1948ஆம் ஆண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தட்டு பட்கர் 284 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள் உட்பட 123 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் 1977ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நடந்த டெச்ட் போட்டியில் இந்திய ஜாம்பவானான மோகிந்தார் அமர்நாத் 175 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
நம்பர் 3ல் களமிறங்கிய அவருக்கு அதுதான் முதல் சதமாகும். அதன்பின் 1981ஆம் ஆண்டு கிரேக் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் ஆடிய இந்திய அணியின் சந்தீப் பாட்டீல் 240 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 174 ரன்களை விளாசி சாதனை படைத்தார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டு தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 117 பந்துகளில் 116 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன்பின் 2000ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய விவிஎஸ் லக்ஷ்மண் 198 பந்துகளில் 167 ரன்களை விளாசி தனது முதல் சதத்தை எட்டினார். தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 213 பந்துகளில் 116 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
இதன்பின்னர் 2015ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 262 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல், 110 ரன்களை விளாசி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சில வாரங்களிலேயே கேஎல் ராகுல் அந்த சதத்தை விளாசி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா மண்ணில் தன் முதல் சதத்தை விளாசி இருக்கிறார்.