துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடைந்து போய் காணப்பட்டார். அப்போது அவரை கட்டி அணைத்து விராட் கோலி செய்த செயல் காண்பவர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய இந்த போட்டியில், அவர்கள் இருவரும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து இருந்தனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடி 96 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்திருந்தார். அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்திருந்தார். துபாய் மைதானத்தில் 264 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனாலும் இந்திய அணி விராட் கோலியின் பேட்டிங்காலும், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பேட்டிங்காலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 84 ரன்கள் சேர்த்திருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியா அரையிறுதியில் தோல்வி அடைந்து சோகத்தில் இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அருகே வந்த விராட் கோலி அவரை அணைத்து ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினார். அதை ஸ்மித்தும் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டி மட்டுமே முழுமையாக விளையாடியது. அந்த அணி மொத்தம் மூன்று குரூப் சுற்று போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மழையால் டாஸ் கூட போட முடியாத நிலையில் கைவிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்து கொண்டிருந்த போது 12 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா அணி முழுமையாக விளையாடி வெற்றி பெற்றிருந்தது.
எனவே, ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் அதிக போட்டி அனுபவம் இன்றி இருந்ததும், இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய அணி குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என மூன்று அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.