விராட் கோலிக்கு ஐசிசி தண்டனை அளித்தது.. சாம் கோன்ஸ்டாஸ்-இடம் நடந்து கொண்டது தவறு என ஒப்புக்கொண்டார்
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி செய்த தவறுக்கு அவரது போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என மேட்ச் ரெப்ரீ அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி விராட் கோலிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ இடித்து மோதலில் ஈடுபட்டார். விராட் கோலி விதியை மீறி தவறாக நடந்து கொண்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. தன் மீதான தவறை விராட் கோலி ஒப்புக்கொண்டார். இதை அடுத்து அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. அத்துடன் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

ஐசிசி நடத்தை விதிகளில் உள்ள 2.12 என்ற விதியில் "கிரிக்கெட்டில் எந்த விதமான தகாத உடல் தொடர்பும் தடைசெய்யப்பட்டுள்ளது. வீரர்கள் வேண்டுமென்றே, பொறுப்பற்ற முறையில் மற்றும் / அல்லது அலட்சியமாக நடந்தால், அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல் மற்றொரு வீரர் அல்லது நடுவரைத் தோளினால் இடித்தால், இந்த விதிமுறைகளை மீறியதாக கருதப்படுவார்கள்.: என குரிப்பிடப்படுய் இருக்கிறது,
மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது தோள்களால், ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ இடித்தார். பின்னர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விராட் கோலி வேண்டுமென்றே தான் நடந்து சென்ற திசையை மாற்றி, சாம் கோன்ஸ்டாஸ் அருகே சென்று அவரை இடித்தார்.
சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். தனது அறிமுகப் போட்டி என்றும், உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா என்பதையும் யோசிக்காமல் ஸ்கூப் ஷாட்களால் இந்திய அணியை திணற வைத்தார். பும்ராவின் இரண்டு ஓவர்களில் மட்டும் அவர் இரண்டு சிக்ஸ் உட்பட மொத்தம் 32 ரன்கள் சேர்த்தார்.
இந்த நிலையில், சாம் கோன்ஸ்டாஸ்-ஐ திசை திருப்பும் வகையில் விராட் கோலி 10வது ஓவரின் முடிவில் அவரை இடித்தார். கோலி மீது தான் தவறு என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், விராட் கோலிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 20 சதவீத அபராதம் மற்றும் ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. மேலும், விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதையும் சேர்த்து பார்த்தால் கோலிக்கு அதிக டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கும்.
24 மாத காலத்தில் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications