பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக 22 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கவுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 8 அரைசதங்கள் உட்பட 1,407 ரன்களை விளாசி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினாலும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. இதனால் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் ஆஸ்திரேலியா மண்ணில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் போது ஒவ்வொரு தொடக்க வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வரும்.

2018-19ல் முரளி விஜய், 2020-21ல் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் சிக்கலை சந்தித்தனர். இதன்பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர்களால், மீண்டும் இந்திய அணிக்குள் வர முடியவில்லை. அந்த அளவிற்கு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும். இம்முறை இந்திய அணி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருடன் களமிறங்கவுள்ளது.
அதில் ஜெய்ஸ்வால் 22 வயதை மட்டுமே எட்டியிருப்பதால், அவர் ஆஸ்திரேலியா பிட்சில் இருக்கும் பவுன்ஸை எப்படி கையாள்வார் என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் ஜெய்ஸ்வாலின் காலில் கட்டியிருக்கும் பேடின் அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுவும் ஜெய்ஸ்வாலுக்கு ஆஸ்திரேலியாவில் பிரச்சனையை கொடுக்கலாம்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவது குறித்து ஜெய்ஸ்வால் பேசுகையில், சீனியர் லெவல் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது விராட் கோலியுடன் அதிகமாக உரையாட முடிந்தது. அப்போது அவர் எப்படி ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கும் தயாராகிறார், உடற்பயிற்சி, ஃபிட்னஸ், பேட்டிங் பயிற்சி என்று நேரம் தவறாமல் செயல்படுகிறார் என்பதை அறிய முயன்றேன்.
அப்போது அவர் என்னிடம், கிரிக்கெட்டில் என்னவெல்லாம் சாதிக்க நினைக்கிறாயோ, அதற்கு ஒழுக்கம் மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் பயிற்சி, ஃபிட்னஸ், டயட், உணவுக் கட்டுப்பாடு என்று அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அதனை வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அவரின் வார்த்தைகள் எனக்கு உந்து சக்தியாக அமைந்தது.
ஃபிட்னஸ், பயிற்சி, டயட் ஆகியவற்றை எனது அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றாக மாற்றிக் கொண்டேன். அது ஒவ்வொரு நாளும் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. எப்போது ஒரு வேலையில் கன்சிஸ்டன்சி முக்கியம் என்று நினைப்பேன். கன்சிஸ்டன்சி வரும் போது, நிச்சயம் நமது வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும். இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக சிறப்பாக தயாராகி இருக்கிறார்.
என்ன திட்டத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும், என்ன மாதிரியான பிட்சில் விளையாடப் போகிறோம், என்ன மாதிரியான ஷாட்கள் விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் வலைப்பயிற்சியில் செயல்பட்டேன். பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஒரு தேவையுடன் தான் இருந்துள்ளேன். அதேபோல் பயிற்சிக்கு பின் நல்ல தூக்கம் மற்றும் சாப்பாடு ஆகியவற்றை தவறாமல் எடுத்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.