Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: “விடைபெறுகிறேன்”.. கோலி செய்த செயல்.. உறைந்து நின்ற ரசிகர்கள்.. ஓய்வு அறிவிப்பா?

அடிலெய்டு: விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆன விராட் கோலி, ஆட்டமிழந்து வெளியேறியபோது அடிலெய்டு மைதான ரசிகர்களை நோக்கி கையசைத்து விடைபெற்றது, அவரது ஓய்வு குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அடிலெய்டு ஓவல் மைதானம் விராட் கோலியின் கோட்டை என்றே வர்ணிக்கப்படும். வெளிநாட்டு வீரர் ஒருவர், இந்த மைதானத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 975 ரன்கள் குவித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் கோலி. இன்று அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது ரசிகர்கள் கரவொலியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி இருந்ததால் இந்தப் போட்டியில் ரன் குவிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், வெறும் நான்கு பந்துகள் மட்டுமே நீடித்த அவரது ஆட்டம், ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

IND vs AUS Virat Kohli Retirement Speculation Surges as He Waves Goodbye to Adelaide Fans

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது, ரசிகர்கள் மீண்டும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கோலி தனது வலது கையை உயர்த்தி, அமைதியாக ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

கையசைவின் அர்த்தம் என்ன?

கோலியின் இந்தச் செயல், இயல்பான ஒன்றுதானா அல்லது அதற்குள் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதா என்ற விவாதம் உடனடியாகப் பற்றிக்கொண்டது. "இதுதான் அடிலெய்டு மைதானத்தில் தனது கடைசி ஆட்டமாக இருக்குமோ? அதனால்தான் ரசிகர்களுக்கு விடை கொடுக்கிறாரா?" என சிலரும், "ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறும் முடிவை அவர் எடுத்துவிட்டாரா?" என்பது போன்ற கேள்விகளுடன் சிலரும் சமூக வலைதளங்களில் #KohliRetirement போன்ற ஹேஷ்டேக்குகளை பரப்பினர். கோலியின் தொடர் டக் அவுட்களை விட, அவரது இந்த கையசைவுதான் அதிகமாகப் பேசப்பட்டது.

தொடரும் மோசமான ஃபார்ம்

ஏழு மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள விராட் கோலிக்கு இந்தத் தொடர் சோதனையாக அமைந்துள்ளது. பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆன அவர், இன்று அடிலெய்டிலும் உள்நோக்கி வந்த பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.

தனது வலுவான பகுதி என வர்ணிக்கப்படும் பேடில் வாங்கக்கூடிய பந்துகளில் கூட, அவரால் பந்தை சரியாகக் கணிக்க முடியாதது அவரது ஃபார்ம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. கோலியின் இந்தச் செயல், ஒரு சாதாரண நிகழ்வா அல்லது ஒரு சகாப்தத்தின் முடிவிற்கான முன்னுரையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அவரது ரசிகர்களுக்கு இந்தச் சம்பவம் பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

Story first published: Thursday, October 23, 2025, 10:59 [IST]
Other articles published on Oct 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+