மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக விளையாடிய விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தது ரசிகர்களை வேதனை அடைய செய்தது.
சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தந்த விராட் கோலிக்கு தேவையில்லாத நெருக்கடி இந்திய அணி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விராட் கோலி ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் இளம் வீரர்களை நோக்கி அணி நகர்வதால் விராட் கோலி அணியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனதும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன், விராட் கோலிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோலி அடித்து விளையாடும் வீரர். பந்துகளை எதிர்கொள்ளும் விதம் பிரமிக்கத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 14,000 ரன்கள் மேல் அடித்து இருக்கின்றார். எனவே அவருடைய அணுகுமுறை குறித்து கேள்வி கேட்க இடமே கிடையாது. எழும்பி வரும் பந்தை நேர்த்தியாக அடித்து ரன்களை சேர்ப்பதில் அவர் வல்லவர்.
என்னைக் கேட்டால் நான் ஒரே ஒரு அறிவுரை மட்டும் தான் விராட் கோலிக்கு சொல்வேன். தனக்குள்ளே அவர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதை அவர் நிறுத்த வேண்டும். இதே போல் தேவையில்லாமல் யோசிக்க கூடாது. இது இரண்டும் தவறுகளுக்கு இடம் கொடுக்கும். விராட் கோலி மனதளவில் எப்போது நிதானமாகவும், தெளிவாகவும் இருக்கிறாரோ அப்போதெல்லாம் அபாயகரமான வீரராக இருந்திருக்கிறார்.
ஏனென்றால் போட்டியின் சூழலை அறிந்து அதற்கு ஏற்ப விளையாடும் திறன் விராட் கோலிக்கு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவருக்கு பெரிய அளவிலான அனுபவமும் கைகொடுக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.