சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட் அடித்த பந்தை, ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த விராட் கோலி அசத்தலாக கேட்ச் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் விராட் கோலி களத்தில் இருப்பதை ரசிகர்களுக்கு நிரூபித்து காட்டியுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுவதல் வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலியின் கடைசி ஆட்டம் என்பதால், அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சிட்னி மைதானத்திலும் அத்தனை டிக்கெட்டுகளும் நேற்றே விற்று தீர்ந்துவிட்டன. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள விராட் கோலி, ரசிகர்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் ஒரு வழியாக விராட் கோலி ஃபீல்டிங்கின் போதே உற்சாகமாக காணப்படுகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட்-க்கு இந்திய அணியின் குல்தீப் யாதவ், அக்சார் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் டைட் லைனில் வீசிக் கொண்டே இருந்தனர். இதனால் ஸ்வீப் ஷாட் அடிக்க முடியாமல் ஷார்ட் தடுமாறினார்.
இதனையறிந்து விராட் கோலி ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங்கிற்கு நிறுத்தப்பட்டார். இதையடுத்து ஸ்வீப் ஷாட் அடிப்பதற்காகவே வாஷிங்டன் சுந்தர் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்ய, ஷார்ட்-ம் ஸ்வீப் அடித்தார். அது நேராக விராட் கோலி கைகளுக்கு மின்னல் வேகத்தில் சென்று விழுந்தது. பந்தின் வேகத்தை அறிந்து விராட் கோலி கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்று கேட்சை பிடித்தார்.
விராட் கோலியின் இந்த கேட்ச் காரணமாக ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் ரசிகர்கள் ஸ்டன்னாகி நின்றனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் விராட் கோலியை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான ஒரு மொமண்ட் கிடைத்துவிட்டதாக உற்சாகம் அடைந்துள்ளனர். விராட் கோலியின் கேட்ச் வீடியோவும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.