Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பாக்ஸிங் டே டெஸ்ட்.. அப்படினா என்ன? வாயை பிளக்க வைக்கும் மெல்போர்ன் டெஸ்ட்டின் வரலாறு

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் டிசம்பர் 26 அன்று மெல்போர்னில் துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என அழைக்கப்பட்டு வரும் நிலையில், "பாக்ஸிங் டே" என்றால் என்ன? ஏன் ஆண்டின் முடிவில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது டிசம்பர் 26 ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் குறிக்கிறது. இது முக்கியமாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஒரு பாரம்பரியமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த போட்டியை முதலில் நடத்தியது ஆஸ்திரேலியா தான்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match

பாக்ஸிங் டே டெஸ்ட் ஒருபுறம் இருக்க, "பாக்ஸிங் டே" என்றால் என்ன என்பது பற்றி முதலில் பார்க்கலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இந்த பாரம்பரியம் தொடங்கியது. கிறிஸ்துமஸுக்குப் பிறகு, முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுப் பெட்டிகளை (box) வழங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். அந்த நாளை பாக்ஸிங் டே என்று அழைத்தனர். அதாவது பரிசுப் பெட்டிக்கான நாள் என்ற பொருளில் அந்த நாள் அழைக்கப்பட்டது.

பின்னர் ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய உள்ளூர் அணிகளுக்கு இடையே கிறிஸ்துமஸ் நேரத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கிறிஸ்துமஸை கொண்டாட முடியாததால், போட்டிகள் ஜனவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன. இதுவே கிறிஸ்துமஸுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்தது.

1950-51 ஆஷஸ் தொடரின் போது மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 22-27 தேதிகளில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. எனினும், அது பாக்ஸிங் டே ஆன டிசம்பர் 26 அன்று துவங்கவில்லை.

1974-75 ஆஷஸ் தொடரில், மெல்போர்ன் டெஸ்ட் பாக்ஸிங் டே அன்று தொடங்கியது. அதாவது டிசம்பர் 26 அன்று தொடங்கியது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது முதல் டிசம்பர் 26 அன்று துவங்கும் டெஸ்ட் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என அழைக்கும் வழக்கம் உருவானது.

பின்னர் இந்த வழக்கம் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. 1989 இல், ஒரு முறை பாக்ஸிங் டே ஆன டிசம்பர் 26 அன்று டெஸ்ட் போட்டிக்கு பதிலாக இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடியது. 1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளை நடத்துவதை ஆஸ்திரேலியா வழக்கமாக மாற்றியது.

இது ஒரு நீண்டகால பாரம்பரியம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக மாறியதை அடுத்து பாக்ஸிங் டே போட்டிகளை காண அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வரத் தொடங்கினர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து பார்க்கின்றனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் போட்டி நடப்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு பண்டிகை கால கொண்டாட்டமாகவும் மாறி விட்டது. இதுவரை மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்பது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது. அதில் ஆஸ்திரேலியா ஐந்து வெற்றிகளையும், இந்தியா இரண்டு வெற்றிகளையும் பெற்று உள்ளன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்து உள்ளன. கடைசியாக நடந்த இரண்டு பாக்ஸிங் டே போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 22, 2024, 19:38 [IST]
Other articles published on Dec 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+