சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்காற்றினார். இதனால் அந்த தொடருக்கு பின் தற்போது தான் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது.

இதில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறாமல் ஹர்ஷித்ராணாவை தேர்வு செய்தது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றிருக்க வேண்டும்.
என்னுடைய கேள்விகள் எல்லாம் ஹர்சித் ராணாவை எதிர்த்து தேர்வு செய்திருக்கிறீர்கள். உலகில் எங்கு வெள்ளை நிற பந்து கிரிக்கெட் விளையாடினாலும், எனது அணியின் வருண் சக்கரவர்த்தி கண்டிப்பாக இருந்திருப்பார் முகமது சமி போன்ற திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படவில்லை என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.
இதே ஆஸ்திரேலியா மைதானங்களில் தான் டி20 போட்டி நடைபெற இருக்கிறது. அதில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசப் போகிறார். அதில் நீங்கள் வருண் சக்கரவர்த்தியை பெஸ்ட் ஸ்பின்னர் என நினைத்து தேர்வு செய்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதே ஆடுகளத்தில் வருண் சக்கரவர்த்தியால் 10 ஓவர்கள் வீச முடியாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வருண் சக்கரவர்த்தி மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் இதில் அவருடைய எக்னாமி வெறும் 4.53 என்ற அளவில் இருக்கிறது. ஹர்ஷித் ரானா மொத்தமாகவே 5 ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.