ஆஸி. பிளானை வைத்தே செக்.. நடராஜனை டீமில் எடுப்பதே இதற்குத்தான்.. வெளியான ரகசியம்!
சிட்னி : இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இடம் பெற இருப்பதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஆட உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அதன் பின்னணி பற்றி தெரிய வந்துள்ளது.
அவர் வேகப் பந்துவீச்சாளர் என்பதை தாண்டி சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தவும் உதவ இருக்கிறார்.
இந்த திட்டம் ஆஸ்திரேலியா சில காலமாக பயன்படுத்தி வந்தது. அதை வைத்தே அந்த அணிக்கு சிக்கலை உண்டாக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி.

உமேஷ் காயம்
இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவ் காயம் அடைந்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் பந்து வீசிய போது காயத்தால் வெளியேறினார். இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

நடராஜனுக்கு வாய்ப்பு
ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஷமிக்கு பதில் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடராஜன் சேர்க்கப்பட உள்ளார்.

சைனி என்ன ஆனார்?
நவ்தீப் சைனி இருந்தாலும், அவரைத் தாண்டி நடராஜன் அணியில் வாய்ப்பு பெறுவார் என்கிறார்கள். நவ்தீப் சைனி அதிக வேகத்தில் வீசினாலும் நடராஜன் போல அவரிடம் துல்லிய யார்க்கர் பந்துவீச்சோ, எப்போதும் ஸ்விங் செய்யும் வித்தையோ இல்லை.

காரணம்
அது மட்டுமின்றி, நடராஜன் பந்தை வீசும் போது பிட்ச்சில் அதன் தாக்கம் தெரியும். ஃபுல் லென்த்தில் அவர் பந்து வீசும் போது பிட்ச் சேதம் அடையும். அது சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு விக்கெட் வீழ்த்தும் களத்தை அமைத்துக் கொடுப்பார் நடராஜன்.

ஆஸ்திரேலியா திட்டம்
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் இதே போலவே பந்து வீசி வருகிறார். அதன் காரணமாக, அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் எளிதாக விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலிய அணியின் இந்த திட்டத்தை இந்திய அணியும் தற்போது பின்பற்ற உள்ளது.


Click it and Unblock the Notifications