அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாட முற்பட்டனர்.

ஒருபுறம் கில் 7 பந்துகளில் நான்கு ரன்கள் ஆட்டம் இழக்க மறுபுறம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 47 ரன்களில் வெளியேற நடு வரிசை வீரர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது.
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் பௌண்டரி அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அதன் பிறகு கம்மின்ஸ் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது கம்மின்ஸ் வீசிய ஒரு பந்தை தொடவே முடியாத அளவுக்கு அனல் பறக்கும் லைன் மற்றும் லென்த்தில் இருந்தது. இது ஸ்ரேயாஸ் ஐயரை திக்குமுக்காடி செய்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் யிடம் கேட்சாகி இழந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பெற்றதற்கு ஸ்ரேயாஸ் ஒரு காரணமாக இருந்தார்.
நடு வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தொடர்ந்து ரன்களை சேர்த்து வந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் நான்கு ரன்களில் வெளியேறியது, இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது. ஆனால் இந்த போட்டியில் நிச்சயம் இது ஸ்ரேயாஸ் தவறில்லை. ஏனென்றால் அந்த பந்து எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் எதிர் கொண்டிருக்க முடியாது. இதனால் இந்திய அணி 81 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.