நான்தான்டா மாஸ்.. ரஞ்சி டிராபியிலும் அசராமல் பிரம்மாண்ட சதம் விளாசிய ஜெய்ஸ்வால்.. அலறிய ராஜஸ்தான்!
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 156 ரன்களையும் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயார் என்று பிசிசிஐ நிர்வாகிகளுக்கு உரக்க கூறி இருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். அதிலும் 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 175 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இருந்தாலும் ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ரோகித் சர்மாவின் வரவால், அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன்பின் நாடு திரும்பிய ஜெய்ஸ்வால் உடனடியாக ரஞ்சி டிராபியில் விளையாட அறிவுறுத்தப்பட்டார்.
பின்னர் மும்பை அணியுடன் இணைந்த ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தயாராகினர். இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 97 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசினார். இதனால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 617 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய தீபக் ஹூடா 335 பந்துகளை எதிர்கொண்டு 248 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க களமிறங்கிய மும்பை அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 174 பந்துகளில் ஒரு சிக்ஸ், 18 பவுண்டரி உட்பட 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்து டிராவில் முடித்தது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு ஜெய்ஸ்வால் தயாராகிவிட்டதாக பிசிசிஐ நிர்வாகிகளுக்கு உணர்த்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications