IND vs AUS: "வெளியே போங்க ஜெய்ஸ்வால்" இடியை இறக்கிய அம்பயர்.. உறைந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. அது குறித்து ஜெய்ஸ்வால் கள அம்பயர்களிடம் முறையிட்டார். ஆனால், அம்பயர்கள் அவரை வெளியே செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
இந்திய அணி இந்தப் போட்டியை டிரா செய்வதற்கான கடைசி கட்டத்தில் இருக்கும்போது இந்த டிஆர்எஸ் விவகாரம் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 92 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நோக்கில் நிதானமாக ஆடியது.
குறிப்பாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நீண்ட நேரம் விக்கெட் இழக்காமல் நின்று ஆடினார். கேப்டன் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் குறைந்த பந்துகளிலேயே ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் 104 பந்துகள் வரை சந்தித்து 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின் ஜடேஜா மற்றும் நிதிஷ் குமாரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 130 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்த நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து ஆடினர். அப்போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக ஆஸ்திரேலிய வீரர்கள் நினைத்தனர்.
களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்காக மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்டது ஆஸ்திரேலிய அணி. அந்த பந்தை ரீப்ளே செய்து பார்த்தபோது பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டை கடக்கும்போது லேசாக திசை மாறி செல்வதாக தெரிந்தது. ஆனால், ஸ்னிக்கோமீட்டரில் பார்க்கும்போது எந்த அதிர்வுகளும் அதில் இல்லை.
பொதுவாக ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வுகள் இல்லை என்றால் நாட் அவுட் என்றுதான் மூன்றாவது அம்பயர் முடிவை அறிவிப்பார். ஆனால், அதற்கு மாறாக பந்து திசை மாறி சென்றது போல் இருந்ததால் அதை வைத்து மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தார். இது பெரிய சர்ச்சையானது.
ஜெய்ஸ்வால் களத்தில் இருந்து அம்பயர்களிடம் இதுபற்றி முறையிட்டார். ஆனால், அவர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு ஜெய்ஸ்வாலுக்கு அறிவுறுத்தினர். இதை அடுத்து இந்திய ரசிகர்கள் மூன்றாவது அம்பயர் தவறாக அவுட் கொடுத்து இருப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பின் இந்திய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications