சென்னை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு தற்போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னைக்கு திரும்பி இருக்கிறது. வங்கதேச அணி முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

நமது சென்னை மைதானத்தில் இந்திய அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. கொரோனா காலம் என்பதால் சென்னையில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் அப்போது நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டில் வென்று அசத்தியது.
இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டில் குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச விலை டிக்கெட்டாக 15 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதில் டிக்கெட் விலை மொத்தம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. சி, டி, இ கீழ்தளத்தில் இருந்து போட்டிகளை பார்க்க ஆயிரம் ரூபாயும் ஐ,ஜே கே மாடத்திலிருந்து கீழ்த்தரத்திலிருந்து போட்டியை பார்க்க 2000 ரூபாயும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஐ ஜே கே மாடத்தில் மேல் தளத்திலிருந்து போட்டியை பார்க்க 1250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் மு கருணாநிதி பார்வையாளர் மாவட்டத்திலிருந்து போட்டியை பார்க்க ஒரு டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று ஏசி வசதி உடைய சி, டி,ஈ பார்வையாளர்கள் மாடத்தில் ஒரு டிக்கெட்டின் விலை பத்தாயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஜே பார்வையாளர்கள் மாடத்தில் ஏசி வசதி கொண்ட ஒரு டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் அனைத்தும் https://insider.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் கேமரா, லேப்டாப், டேப்லட்,பவர் பேங்க் போன்ற பொருட்களை மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்றும் மொபைல் போனை பார்வையாளர்கள் எடுத்துச் செல்லலாம்.
இதே போன்று ஹெல்மெட், லேப்டாப், பேக், குடை உள்ளிட்ட வேறு எந்த பொருட்களும் மைதானத்திற்குள் எடுத்துச் சொல்லக்கூடாது. இதேபோன்று கார்களுக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம் ரயில்வே கார் பார்க்கிங், பி டபிள்யூ டி பார்க்கிங் பகுதி மற்றும் விக்டோரியா ஹாஸ்டல் பகுதி மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் பார்வையாளர்கள் பொது போக்குவரத்தில் பயன்படுத்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் பார்வையாளர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டியின் இடைவெளியின் போது மைதானத்தை விட்டு வெளியேறினால் மீண்டும் உள்ளே வர அனுமதி அளிக்கப்படாது என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது.