எல்லை மீறிய பண்ட்.. பேட்டால் பதிலடி கொடுத்த வங்கதேச வீரர் மொமினுல்.. சாதனை சதம்.. என்ன நடந்தது?
கான்பூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வங்கதேச வீரர் மொமினுல் ஹக்கை, அவரது உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சதம் அடித்து சாதனைகளை உடைத்து இருக்கிறார் மொமினுல் ஹக். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிராவை தவிர்க்க போராடி வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாள் அன்று வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் களத்தில் இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் நான்காவது நாள் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.

முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மொமினுல் ஹக் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அவரது உயரத்தை கிண்டல் செய்யும் வகையில் பேசி இருந்தார். சற்று உயரம் குறைவான வீரரான மொமினுல் ஹக் வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
அவர் இந்திய மண்ணில் இதற்கு முன் பெரிதாக ரன் குவித்ததில்லை. 8 இன்னிங்ஸ்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் அவர் ஓரளவு ரன் சேர்த்து ஆடி வந்தார். அப்போது ரிஷப் பண்ட் மீண்டும் அவரது உயரத்தை கிண்டல் செய்யும் வகையில், மொமினுல் ஹக்கின் ஹெல்மெட்டில் பந்து பட்டால் கூட நாம் எல் பி டபுள்யூ கேட்கலாம்" என்றார்.
பொதுவாக பந்து பேட்டில் படாமல் ஒரு வீரரின் காலில் பட்டால் எல் பி டபிள்யூ கேட்பார்கள். அதாவது ஸ்டம்ப்பை ஒரு வீரர் மறைத்து ஆடும் போது, ஸ்டம்புக்கு நேராக அந்த வீரரின் உடலில் பந்து பட்டால் எல் பி டபுள்யூ கேட்க முடியும். ஸ்டம்ப் என்பது ஒரு வீரரின் முட்டிக்கால் அளவு உயரம் வரை மட்டுமே இருக்கும் என்பதால் காலில் பந்து படும்போது எல்லாம் எல் பி டபுள்யூ கேட்பது வழக்கம்.
ஆனால், மொமினுல் ஹக் உயரம் குறைவாக இருப்பதால் ஸ்டம்ப் உயரத்துக்கு தான் அவர் இருக்கிறார் என்று கிண்டல் செய்யும் வகையில், அவரது ஹெல்மெட்டில் பந்து பட்டால் கூட நாம் எல் பி டபுள்யூ கேட்கலாம் என ரிஷப் பண்ட் கூறி இருந்தார். இந்த மோசமான பேச்சை மொமினுல் ஹக் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தொடர்ந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்திய அவர் தனது 13 வது டெஸ்ட் சதம் அடித்தார். 172 பந்துகளில் அவர் சதம் கடந்தார். இது இந்தியாவில் வங்கதேச வீரர் ஒருவர் அடிக்கும் இரண்டாவது டெஸ்ட் சதம் ஆகும். மேலும், கான்பூர் மைதானத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அடிக்கும் சதம் ஆகும்.
கான்பூர் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சதம் அடித்து உள்ளனர். 1984 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ ஹால் சதம் அடித்திருந்தார். அதன் பின் 40 ஆண்டுகளுக்குப் பின் மொமினுல் ஹக் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம் ரிஷப் பண்ட்டுக்கு அவர் தனது பேட்டால் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 107 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து இந்திய அணி அதிரடியாக பேட்டிங் ஆடத் தொடங்கியது.


Click it and Unblock the Notifications