IND vs BAN: ஓடி வந்த அபிஷேக்.. பதறிய சூர்யகுமார் யாதவ்.. செஞ்சுரி வாய்ப்பை பறித்த வங்கதேச வீரர்கள்
துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமாக ஆடினார். அதிரடியாக ரன்களைக் குவித்து வந்த அவர், ஒரு சிறிய தவறால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவரது இந்தத் தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வங்கதேச அணி, அவரை ரன் அவுட் செய்து வெளியேற்றியது. 37 பந்துகளில் 75 ரன்கள் அடித்த அவர், இன்னும் இரண்டு ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் தனது சதத்தை எட்டியிருப்பார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பை இழந்தார்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா வழக்கம் போல அதிரடி துவக்கம் அளித்தனர். சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த சிவம் துபே இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். அவர் சற்று நிதானமாக ஆடினார்.

மறுபுறம், அபிஷேக் ஷர்மா வரிசையாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி வந்தார். தனது அரைசதத்தை வெறும் 25 பந்துகளிலேயே எட்டி அசத்தினார். அதன் பிறகும் அதிரடியாக ஆடிய அவர் 75 ரன்களை எட்டியிருந்தார்.
இந்த நிலையில், 12வது ஓவரின் முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்டார். எதிர்முனையில் இருந்த அபிஷேக் ஷர்மா, பந்து எங்கே செல்கிறது என சரியாகப் பார்க்காமல் அவசரமாக ஒரு ரன் ஓட முயன்றார். மறுபக்கம் பந்து அருகே இருந்ததை பார்த்து பதறிய சூர்யகுமார் யாதவ் அவரை ' வர வேண்டாம்' என கூச்சலிட்டு எச்சரித்தார்.
அதை பார்த்து அபிஷேக் ஷர்மா மீண்டும் மறுமுனை கிரீசை நோக்கி ஓடினார். ஆனால், அதற்குள் வங்கதேச வீரர் ரிசாத் உசேன் பந்தை எடுத்து, அந்த ஓவரை வீசிய பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரஹ்மானிடம் வீசினார். பந்தை பிடித்த ரஹ்மான், நிதானமாக பெயில்சை தகர்த்தார். இதைத் தொடர்ந்து, அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவர் ஆட்டமிழந்த போது இந்திய அணி 11.1 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பிறகு ரன் குவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவும் 11 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 12 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்களை இழந்தது. அதன் பிறகு ஒட்டுமொத்த இந்திய பேட்டிங்கும் மோசமாகவே இருந்தது. திலக் வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.


Click it and Unblock the Notifications