ஹைதராபாத்: இந்திய டி20 அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா வாய்ப்பின்றி தவித்து வரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழி விடும் வகையில் மோசமாக பேட்டிங் ஆடி இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெறும் 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார் அபிஷேக் சர்மா. அதனால் அவரை நீக்கி விட்டு ருதுராஜ் கெய்க்வாட்டை சேர்க்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அபிஷேக் சர்மா இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில் அதில் ஒரு சதம் அடித்ததை தவிர, மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பதிலாக வேறு வீரருக்கு இந்திய அணியில் துவக்க வீரராக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கான அணியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இடம் பெற்றனர். அபிஷேக் சர்மா கடந்த ஜூலை மாதம் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அறிமுகம் ஆகி இருந்தார்.
அந்த தொடரின் முதல் போட்டியில், தனது அறிமுகத்தில் அவர் டக் அவுட் ஆனார். அதற்கு அடுத்த போட்டியிலேயே அவர் 100 ரன்கள் சேர்த்து முதல் டி20 சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அதனால் அவர் சிறந்த டி20 துவக்க வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதே ஜிம்பாப்வே தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் மொத்தமாக 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 16 ரன்கள் மற்றும் 15 ரன்கள் எடுத்தார் அபிஷேக் சர்மா. தற்போது மூன்றாவது போட்டியில் 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார். அவர் மொத்தம் 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்த ஒரு சதத்தை தவிர வேறு எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டி அவர் ரன் சேர்க்கவில்லை. இதை அடுத்து அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்து உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட காலமாக டி20 அணியில் வாய்ப்பின்றி இருக்கும் நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் பலர் கூறி வருகின்றனர்.