மும்பை: கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகச் சில டெஸ்ட் போட்டிகளிலேயே இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர்களை கொண்ட டெஸ்ட் 11 அணியை தேர்வு செய்து இருக்கிறோம்.
இந்த அணியில் தோனி மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய முன்னாள் கேப்டன்களுக்கு இடமில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். அதே சமயம், இந்த அணியில் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை பார்த்தாலே அதற்கான காரணம் என்ன என்பது புரியும்.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக வீரேந்தர் சேவாக் மற்றும் சுனில் கவாஸ்கர் இடம் பெற்றுள்ளனர். உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தாண்டிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் டெஸ்ட் போட்டிகளில் 34 சதம் அடித்ததும் நீண்ட காலமாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 43.55 ஆக உள்ளது.
வீரேந்தர் சேவாக் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக ஆடும் யுக்தியை கடை பிடித்தவர். 103 டெஸ்ட் போட்டிகளில் 8,503 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 49.43 ஆகும். இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் மட்டுமே. சுனில் கவாஸ்கருக்கு அடுத்த சிறந்த இந்திய டெஸ்ட் அணி துவக்க பேட்ஸ்மேன் ஆவார்.
மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் ஆவார். இவர் மொத்தம் 13,265 ரன்கள் சேர்த்து இருக்கிறார். டிராவிட் 38 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார்.
நான்காம் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இவர் உலகிலேயே அதிக ரன் குவித்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆவார். 15,921 ரன்கள் சேர்த்து இருக்கிறார். 50 டெஸ்ட் சதங்களை அடித்து இருக்கிறார். அந்த சாதனையை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.
ஐந்தாம் வரிசையில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். அவரே இந்த அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏனெனில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டது விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கேப்டன்சியில் இந்திய அணி 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றது. ஒரு பேட்ஸ்மேன் ஆக டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களை அடித்திருக்கிறார் விராட் கோலி. டெஸ்ட்டில் 8,871 ரன்களை குவித்து இருக்கிறார்.
இந்த அணியின் ஆறாம் வரிசை பேட்ஸ்மேன் ஆகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 34 போட்டிகளில் விளையாடி 2,419 ரன்களை சேர்த்துள்ளார். 6 சதங்களை அடித்து இருக்கிறார். ரிஷப் பண்ட்டை விட தோனி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்து இருந்தாலும், அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்ற ஒரு குறை உள்ளது. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் அதிரடியாக ரன் சேர்த்து இருக்கிறார். மேலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதால் ரிஷப் பண்ட் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியின் ஏழாம் வரிசை பேட்ஸ்மேன் ஆக வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், 5,248 ரண்களையும் சேர்த்து இருக்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து ஆல் ரவுண்டராக இருந்தவர். ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருந்தவர்.
எட்டாம் வரிசை பேட்ஸ்மேன் ஆகவும் சுழற் பந்துவீச்சாளராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு இiருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 522 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆவார். ஆறு சதங்களை அடித்து பகுதி நேர பேட்ஸ்மேன் ஆகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார்.
அனில் கும்ப்ளே மற்றொரு சுழற் பந்துவீச்சாளராகவும் ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜாகிர் கான் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஜாகிர் கான் இந்திய அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். கபில் தேவுக்கு பின் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஆக இருக்கிறார் ஜாகிர் கான்.
பும்ரா 37 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவரை கண்டு உலகின் அத்தனை பேட்ஸ்மேன்களும் அஞ்சி வருகின்றனர். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வேகப் பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் இதுவரை 164 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த அணியின் பனிரெண்டாவது மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். உலகில் சிறந்த டெஸ்ட் ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 299 விக்கெட்களையும், 3122 ரன்களையும் சேர்த்துள்ளார்.