சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் அணி வெறும் 80 ஓவர்களை மட்டுமே வீசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்ட போதும், வங்கதேச அணியால் முழு ஓவர்களையும் வீச முடியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 200 ரன்களை கடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.

ஆனால் ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அசால்ட்டாக விளையாடி 7வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் நாளைய ஆட்டத்தில் ஜடேஜாவின் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு வீரர்களுக்கும் சேப்பாக்கம் மைதானம் சொந்த மைதானம் தான்.
இதனால் இருவரின் ஆட்டத்தால் தமிழ்நாடு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அஸ்வின் சதமடித்த போது சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. இதனிடையே இந்த போட்டியில் வங்கதேசம் அணியின் பவுலிங் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. பவுலிங் செய்வதிலோ, லைன் மற்றும் லெந்தில் வீசுவதிலோ விமர்சனங்கள் எழவில்லை.
மாறாக முதல் நாள் ஆட்டத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட போது, வங்கதேசம் அணியால் 90 ஓவர்களை நிறைவு செய்ய முடியவில்லை. மொத்தமாகவே முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 80 ஓவர்களை தான் வீசி இருக்கிறது. எதற்காக வங்கதேசம் இவ்வளவு தாமதமாக ஓவர்களை வீசியது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்திலேயே இருக்கும் வகையில் பார்த்து கொண்டது. ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா என்று அடுத்தடுத்து இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்து கொண்டே இருந்தனர். இதனால் வங்கதேசம் அணியால் சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசனை பவுலிங் செய்ய வைக்க முடியவில்லை.
எந்த நேரத்தில் ஷகிப் அல் ஹசன் பவுலிங் செய்ய வந்தாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர். இன்றைய ஆட்டத்தில் 8 ஓவர்களை மட்டுமே வீசிய ஷகிப், மொத்தமாக 50 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு வங்கதேசம் அணியை இந்திய அணி தள்ளியது.
இரு முனையிலும் ஸ்பின்னர்களை பவுலிங் செய்ய வைக்க முடியாததால், இந்திய அணியின் ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வழியில்லாமல் 3 வேகப்பந்துவீச்சாளர்களையே வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ மாற்றி மாற்றி அழைத்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் டஸ்கின் அஹ்மத் ஃபீல்டிங் செய்யவே முடியாமல் திணறியதையும் பார்க்க முடிந்தது.
வங்கதேசம் அணியின் மிக முக்கியமான பவுலரை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ததால், மாற்று திட்டம் இல்லாமல் அந்த அணி பயணித்தது. இதன் காரணமாக ஓவர்களை வீச தாமதம் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனை வங்கதேசம் அணி சரி செய்யவில்லை என்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.