கான்பூர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று வங்கதேச அணியின் ஜாம்பவான் வீரரான ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக வங்கதேசம் அணியின் ஜாம்பவான் வீரரான ஷகிப் அல் ஹசன் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் காரணமாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்பி-யாக பொறுப்பேற்றார்.

தற்போது இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் செல்வதற்கு தயக்கம் கொண்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் வழக்கறிஞர் தரப்பில், ஷகிப் அல் ஹசன் மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஷகிப் அல் ஹசன் தாராளமான வங்கதேசம் வரலாம். அவர் நிச்சயம் கைது செய்யப்பட மாட்டார். யாரையும் துன்புறுத்த கூடாது என்பதில் கவனமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஷகிப் அல் ஹசன் தொடர்ச்சியாக பாகிஸ்தான், இங்கிலாந்து என்று வெளிநாடுகளில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியதே எனது கடைசி சர்வதேச டி20 போட்டியாக கருதுகிறேன். எனது டி20 எதிர்காலம் குறித்து வங்கதேசம் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஆலோசித்துவிட்டேன்.
2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து பார்க்கும் போது, இதுதான் சரியான நேரமாக நினைக்கிறேன். இந்த முடிவை எடுப்பதால், எனக்கு எந்த ஏமாற்றமும் கிடையாது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியை மிர்பூர் மைதானத்தில் விளையாட விரும்புகிறேன். அக்டோபர் மாதத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடக்கவுள்ளது. அந்த போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளேன்.
ஒருவேளை வங்கதேசம் தேர்வுக் குழு என்னை தேர்வு செய்யவில்லை என்றாலோ அல்லது பயணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றாலோ, கான்பூரில் நடக்கும் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே என் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்காக அறிமுகமான ஷகிப் அல் ஹசன், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.