உலகக்கோப்பையில் 2 செஞ்சுரி அடிச்சா கோலின்னு நினைப்பா.. உள்ளூர் மேட்ச்சில் கூட சான்ஸ் கொடுக்கக்கூடாது
மும்பை: உலகக் கோப்பையில் இரண்டு சதம் அடித்து விட்டால் நாமும் விராட் கோலி என நினைத்துக் கொள்ள முடியாது எனவும், கிரிக்கெட் விளையாட்டை மதிக்காதவருக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரில் கூட இடம் அளிக்கக் கூடாது எனவும் ஸ்ரேயாஸ் ஐயரை விளாசி எடுத்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி.
இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்காக அவர் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வந்தார். சமீபத்தில் துலீப் டிராபி தொடரிலும் அவர் விளையாடினார். ஆனால், அவர் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை.

மேலும், அதிரடி ஆட்டம் ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின்னர் துலீப் டிராபியில் இந்தியா டி அணியில் தொடர்ந்து விளையாடினார். இரண்டாவது போட்டியில் அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவர் அவுட் ஆன விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் போட்டிகளிலும் கூட அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து விக்கெட்டை இழந்து வருகிறார் என ரசிகர்களே சுட்டிக்காட்ட தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் அது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி துலீப் டிராபியில் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் அளித்து இருக்கக்கூடாது எனவும், துலீப் டிராபியில் வாய்ப்பை இழந்த மூத்த டெஸ்ட் வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா விளையாடாததால் ஸ்ரேயாஸ் ஐயர் தப்பினார் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இது குறித்து பாஸித் அலி பேசியதாவது -
"ஒரு கிரிக்கெட் வீரராக ஸ்ரேயாஸ் ஐயரை பாக்கும்போது எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் உங்களுக்கு முன் வரும் பந்தை தடுக்க முடியாமல் ஆட்டம் இழக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த போட்டியின் மீது கவனம் இல்லை என்று தான் அர்த்தம். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் இன்னும் கவனமாக ஆட வேண்டும். அவர் உலகக் கோப்பையில் இரண்டு சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் அவர் துலீப் டிராபியில் 100 முதல் 200 ரன்கள் வரை குவித்து இருக்க வேண்டும்."
"நல்ல வேளையாக ரஹானே மற்றும் புஜாரா துலீப் டிராபியில் ஆடவில்லை. அது ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிர்ஷ்டம் ஆகும். ஸ்ரேயாஸ் ஐயரிடம் டெஸ்ட் போட்டிக்கான பசி இல்லை. அவருக்கு அதிக பவுண்டரி அடிப்பதன் மீது தான் பசி உள்ளது. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் சிந்திக்க வேண்டும்."
"உலகக்கோப்பையில் இரண்டு சதம் அடித்து விட்டால் நாமும் விராட் கோலி போலவே ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. அது அப்படி நடக்கும் விஷயம் அல்ல. ஸ்ரேயாஸ் ஐயரை விரும்பும் இந்தியர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு துலீப் டிராபியில் கூட இடம் அளிக்க மாட்டேன். அவர் இந்த விளையாட்டை மதிக்கவில்லை." என பாஸித் அலி விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications