IND vs BAN: "ஆட்டநாயகன்".. மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்.. ODI வரலாற்றில் அதிவேகமாக 8வது சதம்
துபாய்: இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். குறிப்பாக, இந்திய அணிக்காக அதிவேகமாக முதல் 8 ஒருநாள் போட்டி சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஷிகர் தவான், கவுதம் கம்பீர் போன்ற சிறந்த வீரர்களின் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. அப்போது துவக்க வீரராக இறங்கிய சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஆடினார். அவர் 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
மற்ற பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா 41 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்திருந்தனர். சுப்மன் கில் அடித்த இந்த சதம் அவரது எட்டாவது ஒருநாள் போட்டி சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 51 இன்னிங்ஸ்களில் அவர் எட்டு சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணிக்காக விரைவாக எட்டு ஒருநாள் போட்டி சதங்களை அடித்த வீரர்களின் பட்டியல்:
சுப்மன் கில் - 51 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் - 57 இன்னிங்ஸ்
விராட் கோலி - 68 இன்னிங்ஸ்
கவுதம் கம்பீர் - 98 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 111 இன்னிங்ஸ்
இதுமட்டுமின்றி, சுப்மன் கில் இந்தப் போட்டியில் 125 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இது மிக மெதுவான சதம் என்ற சாதனையும் படைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் அடித்த சதங்களிலேயே இது நான்காவது மெதுவான சதமாகும்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அவர் கடைசியாக ஆடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றும் சாதனை படைத்துள்ளார். மேலும், இந்தப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியிலும் சுப்மன் கில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நான்கு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் மட்டும் அவர் 96 பந்துகளில் 87 ரன்கள், 52 பந்துகளில் 60 ரன்கள், 102 பந்துகளில் 112 ரன்கள் மற்றும் 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருக்கிறார். அதாவது, கடைசி நான்கு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்களையும், இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். தற்போது ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
சுப்மன் கில்லின் இந்த அபார ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது. அவரது ஃபார்ம் மேலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications