195 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. சேப்பாக்கத்தில் அஸ்வின் - ஜடேஜா புதிய சாதனை.. தப்பித்த இந்திய டாப் ஆர்டர்
சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த சுப்மன் கில் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் விராட் கோலியும் 6 ரன்களில் வெளியேறினார்.

இதனால் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது இணைந்த ஜெய்ஸ்வால் - ரிஷப் பண்ட் கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உணவு இடைவேளைக்கு பின் ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதிரடியாக ஆடிய அவர், 56 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே கேஎல் ராகுல் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. அப்போது ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இணைந்தனர். இருவருக்கும் சேப்பாக்கம் மைதானத்தின் முழு தன்மையும் தெரியும் என்பதால், ரசிகர்கள் நம்பிக்கையுடன் பார்த்தனர்.
அதற்கேற்ப அஸ்வின் களமிறங்கி சந்தித்த முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை இருவரும் விளாச, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக 200 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார்.
அதேபோல் ஜடேஜா இருந்ததால், வங்கதேச அணி இடதுகை ஸ்பின்னரான ஷகிப் அல் ஹசனை அட்டாக்கில் கொண்டு வர முடியாமல் தவித்தது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஷகிப் அல் ஹசன் அட்டாக்கில் வந்த போது, உடனடியாக ஜடேஜா பவுண்டரிகளை விளாசி அட்டாக் செய்தார். இதனால் மீண்டும் வேகப்பந்துவீச்சாளரையே அட்டாக்கில் கொண்டு வந்தது வங்கதேசம்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜடேஜாவும் அரைசதம் கடக்க, அஸ்வின் விரைவாக 90 ரன்களை எட்டினார். அப்போது மீண்டும் ஷகிப் அல் ஹசன் அட்டாக்கில் வந்த போது, ஜடேஜா மீண்டும் அபாரமாக சிக்ஸ், பவுண்டரியை விளாசினார். இதனால் இருவரில் யார் முதலில் சதத்தை எட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இறுதியாக அஸ்வின் 108 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். இதன்பின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. 7வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் - ஜடேஜா இணைந்து 195 ரன்களை விளாசியுள்ளனர். சிறப்பாக் ஆடிய அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications