குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி குவாலியரில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்தக் கூடாது என இந்து மகாசபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும், பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் சேர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் பந்த் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், குவாலியரில் மாவட்ட நீதிபதி பந்த்துக்கு எதிரான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். இதை அடுத்து இன்று முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை யாரும் போராட்டத்தில் ஈடுபடவோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விநியோகிக்கவோ கூடாது எனவும், சமூக வலை தளங்களில் வெறுப்பை தூண்டும் வகையில் எந்த பதிவுகளையும் வெளியிடக்கூடாது எனவும் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் போட்டிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பதிவுகளை யாரும் பகிரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அக்டோபர் 7 ஆம் தேதி வரை இந்த உத்தரவுகள் அமலில் இருக்கும் என குவாலியர் காவல் துறை உயர் அதிகாரி அறிவித்து இருக்கிறார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக இந்து மகாசபா என்ற அமைப்பு கடந்த மாதமே வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை எதிர்த்து இருந்தது.
இந்த நிலையில் குவாலியரில் போட்டியை நடத்த விட மாட்டோம் என அந்த அமைப்பு அறிவித்து, தற்போது பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட நீதிபதி கடுமையான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். இது குறித்து குவாலியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் எவர் ஒருவரும் சமூக வலைதளங்களில் இந்த சர்வதேச போட்டிக்கு எதிராகவோ, மதவெறியை தூண்டும் வகையில எந்த கருத்தையும் பகிரக் கூடாது. விளம்பர பதாகைகள், போஸ்டர்கள் கட் அவுட்கள், கொடிகள், சர்ச்சைக்குரிய பொருட்கள், வெறுப்பை தூண்டும் பேச்சு என எந்த வகையான நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடக்கூடாது. உருவ பொம்மை எரிப்பு, கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் மக்கள் ஒன்று கூடி நிற்கக் கூடாது, துப்பாக்கி, கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது, மண்ணெண்ணெய், பெட்ரோல், ஆசிட் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய எந்த ஒரு பொருளையும் யாரும் வைத்திருக்கக் கூடாது என காவல் துறை அதிகாரி அறிவித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியின் பாதுகாப்பு பணியில் 1600 காவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். குவாலியரில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.