147 ஆண்டுகளில் முதல்முறை.. புதிய வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்.. 22 வயதில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!
சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதன் மூலமாக 147 ஆண்டு கால கிரிக்கெட் சாதனையை முறியடித்து ஜெய்ஸ்வால் புதிய அத்தியாசத்தை தொடங்கியுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அஸ்வின் 102 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர். அதேபோல் டாப் ஆர்டர் வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டும் தனியாளாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 26 சிக்சர்கள் உட்பட 712 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய ஜெய்ஸ்வால், அதே ஃபார்மை வங்கதேசம் அணிக்கு எதிரான இந்த இன்னிங்ஸிலும் வெளிப்படுத்தினார். எதிர்முனையில் நின்ற வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினாலும், அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார்.
சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை, ஜெய்ஸ்வால் முறியடித்து அசத்தியுள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் எந்த வீரரும் 750 ரன்கள் எடுத்ததே இல்லை.
இதற்கு முன்பாக 1935ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்டிங்லே சொந்த மண்ணில் ஆடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் 747 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் 743 ரன்களுடன் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவித் மியான்தத் இருந்தார். அதேபோல் ஜிம்பாப்வே முன்னாள் வீரர் டேவ் ஹாக்டன் 687 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 680 ரன்களுடன் 4வது இடத்திலும் இருந்தார். இவர்களை முந்தி ஜெய்ஸ்வால் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சொந்த மண்ணில் ஆடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் ஜெய்ஸ்வால் 768 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்து கூறி பாராட்டி வருகின்றனர்.
நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அறிமுகம் செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான ஜெய்ஸ்வால், முதல் இன்னிங்ஸிலேயே பிரம்மாண்ட சதம் விளாசி அசத்தினார். தென்னாப்பிரிக்கா மண்ணில் சோபிக்க தவறினாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரு இரட்டை சதம் உட்பட 700 ரன்களுக்கு மேல் குவித்தார். இதன் மூலம் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக 22 வயதிலேயே ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார்.


Click it and Unblock the Notifications