குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் அறிமுகமான நிதிஷ் குமார் ரெட்டி ஃபீல்டிங்கில் மிகப்பெரிய சொதப்பல் ஒன்றை செய்தார். இதை அடுத்து வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறைந்து போய் இருந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டி குவாலியர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் மயங்க் யாதவ் ஆகிய இருவரும் அறிமுகம் ஆனார்கள். வருண் சக்கரவர்த்தி சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. வருண் சக்கரவர்த்தியை பவர் பிளே ஓவரிலேயே பந்து வீச வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி அவர் ஐந்தாவது ஓவரை வீசினார். வங்கதேச அணி 2 விக்கெட் இழந்து இருந்த நிலையில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ மற்றும் தவ்ஹித் ஹிருதோய் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர்.
வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் நான்கு பந்துகளை தவ்ஹித் ஹிருதோய் சந்தித்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை தவ்ஹித் தூக்கி அடித்தார். அது பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு சென்ற போது நிதிஷ் குமார் ஓடி வந்து கேட்ச் பிடிக்க முயன்றார். அவர் பந்தை சரியாக பிடிக்காததை அடுத்து கேட்ச் வாய்ப்பு நழுவிப் போனது. அத்துடன் பந்து பவுண்டரிக்கும் சென்றது.
இரண்டாவது பந்திலேயே கேட்ச் வாய்ப்பு நழுவிப் போனதை பார்த்த வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார். நிதிஷ் குமார் கேட்ச்சை நழுவ விட்டபின் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உறைந்து போய், இறுக்கமான முகத்துடன் இருந்தனர்.
அந்த ஓவரில் மட்டும் இரண்டு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தனர் வங்கதேச வீரர்கள். வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 15 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். அதற்கு நிதிஷ் குமார் செய்த சொதப்பலே முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், வருண் சக்கரவர்த்தி அந்த சரிவில் இருந்து விரைவில் மீண்டார். தான் வீசிய அடுத்த மூன்று ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 128 ரன்கள் என்ற சிறிய இலக்குடன் ஆடிய இந்திய அணி அதிரடியாக 11.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.