ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதன் முடிவில் இந்திய அணி 2 - 0 என தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியின் போது வாய்ப்பு பெறாமல் வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கும் மாற்று வீரர்களான திலக் வர்மா, ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எந்த நிலையிலும் பிளேயிங் லெவனை அனாவசியமாக மாற்றக்கூடாது என பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மாற்று வீரர்களாக வெளியில் அமர்ந்திருக்கும் யாருக்கும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்கள் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால், ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரண்டு அனுபவ வீரர்கள் மட்டுமே டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் போது வேகப் பந்துவீச்சாளர்களில் மயங்க் யாதவ் அல்லது அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், மாற்று வீரராக இருக்கும் வேகா பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறுவார். அவருக்கு அதுவே சர்வதேச அறிமுகமாகவும் அமையும்.
முன்னதாக இந்திய டி20 அணியில் சிறப்பாக பந்து வீசி முன்னணி வந்து வீச்சாளர் ஆக இருந்த சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய்-க்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், ரவி பிஷ்னோய் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அதே போல பேட்ஸ்மேன்களில் யாருக்காவது ஓய்வு அளிக்கப்பட்டால் திலக் வர்மா வாய்ப்பு பெறுவார். ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணியை மாற்ற ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழும். இல்லை எனில் அந்த மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படாது. இவர்களைத் தவிர விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் தனக்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். இந்த அணியில், சஞ்சு சங்சன் விக்கெட் கீப்பராக இருப்பதால் ஜிதேஷ் வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கிறார். அதனால், அவருக்கும் இந்த டி20 தொடரில் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது.