இடது - வலது காம்பினேஷன்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த கம்பீர்.. சஞ்சு சாம்சன் வராததற்கு காரணம் என்ன?
துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை கம்பீர் வலது - இடது காம்பினேஷனில் மாற்றியதே சொதப்பலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் கடைசி வரை களமிறக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. முதல் 3 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், அடுத்த 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்களாக உயர்ந்தது.

ஆனால் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 12வது ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டாகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை பயன்படுத்தி வங்கதேச பவுலர்கள் அசாத்திய சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றனர். அதாவது 11 முதல் 20 ஓவர்களில் இந்திய அணி வெறும் 72 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது.
தற்போதைய டி20 கிரிக்கெட்டில் 169 ரன்கள் என்பதை வங்கதேச அணியால் எளிதாக சேஸிங் செய்ய முடியும். இந்திய அணியின் இந்த சொதப்பலுக்கு பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றங்களே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். அதற்காக சிவம் துபேவை கம்பீர் அனுப்பி வைத்தார்.
ஆனால் சிவம் துபே அட்டாக் செய்ய முயன்று 2 ரன்களில் ஆட்டமிழக்க, அது பின்னடைவை கொடுத்தது. உடனடியாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். பின்னர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்ததால், உடனடியாக ஹர்திக் பாண்டியா வந்தார். அடுத்த 4 பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, பின்னர் இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மா களமிறக்கப்பட்டார்.
அடுத்த ஓவரில் திலக் வர்மாவும் ஆட்டமிழந்த பின், சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அக்சர் படேல் களம் புகுந்தார். இதனால் கம்பீர் இடது - வலது காம்பிஷேனில் பேட்டிங் வரிசையை கட்டமைக்க திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் அக்சர் படேல் 15 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதுமட்டுமல்லாமல் ஃபினிஷரான ஹர்திக் பாண்டியாவை 12வது ஓவரிலேயே கம்பீர் களமிறக்கியது ஏன் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த பதிலாக இருக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எந்தவித திட்டமிடலோ, சூழலுக்கோ ஏற்ப பேட்ஸ்மேன்களை களமிறக்காதது இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கும் இடது - வலது காம்பிஷேனில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை கம்பீர் அமைத்ததே காரணமாக விமர்சிக்கப்பட்டது. தற்போது ஆசியக் கோப்பைத் தொடரிலும் கம்பீர் மீண்டும் அதே முயற்சியை மேற்கொண்டு வருவது இந்திய அணியை அதள பாதாளத்திற்கே கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications