டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் விளாசினர்.
இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் பவுலிங் செய்த 7 பவுலர்களுக்கும் விக்கெட் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3 துறைகளிலும் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செய்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் கடைசி நேரத்தில் களம் புகுந்த ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 32 ரன்களை விளாசினார். அதேபோல் இளம் வீரர்களை சோதனை செய்வதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி 4 ஓவர்களையும் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பவுலிங் கிடைக்கவில்லை என்றாலும், ஃபீல்டிங்கில் ஹர்திக் பாண்டியா மிரட்டலான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். மொத்தமாக 3 கேட்ச்களை பிடித்த ஹர்திக் பாண்டியா, ரிஷாத் ஹொசைனுக்கு பிடித்த கேட்ச் மூலமாக பலரையும் வியப்புக்கு உள்ளாக்கினார்.
வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை ஒய்டு லாங் ஆங் திசையில் ரிஷாத் ஹொசைன் தூக்கியடித்தார். அந்த பந்து நிச்சயம் சிக்சர் என்று ரசிகர்கள் அனைவரும் பார்த்த நிலையில், திடீரென டீப் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியா ஆக்ரோஷமாக ஓடி வந்து ஒற்றை கைகளில் கேட்சை பிடித்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். அதன்பின் சுமார் 27 மீட்டர் தூரம் அவர் ஓடி வந்து கேட்ச் பிடித்தது தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாமல், ஓடி வந்த வேகத்தில் தடுமாறி கீழே விழுந்த அவர், டைவ் அடித்து பந்தை கைகளில் இருந்து தவறவிடாமல் பாதுகாத்தார். இந்த போட்டியின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்றாக ஹர்திக் பாண்டியாவின் கேட்ச் அமைந்தது. இதனால் உற்சாகமடைந்த டெல்லி ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவின் பெயரினை கோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினார்.
அதேபோல் இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியாவை நோக்கி ஓடி வந்த ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், அவருக்கு கைகளை கொடுத்து பாராட்டு தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கேப்டன்சி விவகாரத்தால் ஹர்திக் பாண்டியா சோகமாக இருப்பதாக சில தகவல் வெளியாகின. ஆனால் இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து உற்சாகமாக இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.