302 ரன்கள், 21 விக்கெட்.. ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. டி20 உலகக்கோப்பையில் இமாலய ரெக்கார்டு
நார்த் சவுன்ட்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார் ஹர்திக் பாண்டியா. வெறும் 27 பந்துகளில் அவர் 50 ரன்கள் குவித்தார். பந்து வீச்சிலும் விக்கெட் வீழ்த்தினார், அதன் மூலம் ஹர்திக் பாண்டியா இரண்டு வரலாற்று சாதனைகளை படைத்து இருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடரில் ஆறாம் வரிசையில் களம் இறங்கி அரை சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்தார். மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 300 ரன்கள் மற்றும் 20 விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய ஆல் - ரவுண்டர் என்ற இமாலய சாதனையையும் செய்தார் ஹர்திக் பாண்டியா. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக முத்திரை பதித்து இருக்கிறார்.

2024 டி20 உலக கோப்பை தொடருக்கு முன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது. அவரது கேப்டன்சி ஒரு புறம் விமர்சிக்கப்பட்டாலும், அவரது தனிப்பட்ட ஆட்டமும் படுமோசமாக இருந்தது. குறிப்பாக பேட்டிங்கில் ரன் குவிக்கவே திணறி வந்தார். பந்து வீச்சிலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வந்தார். இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 4 போட்டிகளில் 7 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
மறுபுறம் பேட்டிங்கில் இதுவரை மூன்று இன்னிங்ஸ்களில் 89 ரன்கள் குவித்துள்ளார். இதில் வங்கதேச அணிக்கு எதிரான அரை சதமும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 141 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 302 ரன்கள் குவித்து இருக்கிறார். மேலும், 21 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
இந்த வங்கதேசம் எதிரான போட்டியின் போது ஐந்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் கடைசி ஓவர் வரை நின்று இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார் பாண்டியா. ஹர்திக் பாண்டியா ஆறாவது வீரராக இறங்கி விக்கெட் வீழ்ச்சியினால் ஏற்பட்ட அழுத்தத்தையும் தாண்டி 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications