டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 9 அன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா பங்கேற்கும் வாய்ப்பை பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் மூலம் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிச்சயம் அவரை இந்த டி20 தொடரில் அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய இரண்டு வீரர்கள் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டனர். தற்போது மாற்று வேகப் பந்துவீச்சாளராக இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் ஹர்ஷித் ரானாவுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆசி பெற்று இருப்பதால் தான் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். அந்த அணியில் ஹர்ஷித் ரானா இடம் பெற்று இருந்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
அதனை அடுத்து அவருக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபியில் இடம் அளிக்கப்பட்டது. அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் முதல் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டதால் ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
வங்கதேச அணிக்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் அதில் ஏதேனும் ஒரு போட்டியில் ஹர்ஷித் ரானா விளையாட வாய்ப்பு உள்ளது. தற்போது அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு மூன்றாவது டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. அப்போது அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. கவுதம் கம்பீரின் ஆசியுடன் இந்திய அணியில் ஹர்ஷித் ரானா அறிமுகம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கலாம்.