கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று நாட்களில் இதுவரை 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு உள்ளன. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முற்றிலுமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியா இந்தப் போட்டியில் ஜெயிக்கவில்லை என்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் நான்காவது நாள் அன்று மழை பெய்யாத நிலையில் போட்டி முழுமையாக நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று போட்டி முழுமையாக நடைபெற்றாலும் இந்தப் போட்டி டிராவில் முடியவடையவே அதிக வாய்ப்பு உள்ளது. எனினும், இந்தியா என்ன செய்தால் வெற்றி பெற முடியும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை மூன்று விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வரை வீச அம்பயர்கள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி மீதமுள்ள இரண்டு நாட்களில் 196 ஓவர்கள் வீசப்பட வாய்ப்புள்ளது. இதை பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவது பந்துவீச்சாளர்களின் கையிலேயே உள்ளது.
வங்கதேச அணியை எத்தனை விரைவாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆக்குகிறார்கள் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை ரன்கள் எடுத்து வங்கதேச அணி ஆல் அவுட் ஆகிறது என்பதை விட, எத்தனை ஓவர்களில் வங்கதேச அணி ஆல் அவுட் ஆகிறது என்பதே மிகவும் முக்கியமான விஷயம். நான்காவது நாள் ஆட்டத்தில் 50 ஓவர்களுக்குள் வங்கதேச அணி ஆல் அவுட் ஆக வேண்டும்.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 200 முதல் 250 ரன்கள் எடுக்கிறது என வைத்துக் கொண்டால் இந்திய அணி அடுத்து தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் முதல் ஆறு ரன்கள் வரை சேர்க்க வேண்டும். 70 முதல் 80 ஓவர்கள் வரை இந்திய அணி பேட்டிங் செய்து 400 ரன்களுக்கும் மேல் சேர்க்க வேண்டும். இதன் மூலம் சுமார் 130 ஓவர்கள் மொத்தமாக வீசப்பட்டிருக்கும்.
கடைசி 60 முதல் 70 ஓவர்கள் வரை மீதம் இருக்கும். அதற்குள் வங்கதேச அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து ரன் குவிப்பது ஓரளவு சாத்தியமே. ஆனால், இடையில் விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், வங்கதேச அணியின் 17 விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற முடியும். அதுதான் கடினமான விஷயம். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கையிலேயே இந்த போட்டியின் முடிவு உள்ளது.