ஆன்டிகுவா : வங்கதேசம் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் லிட்டன் தாஸ் விக்கெட்டை காற்றின் திசையை அறிந்து திட்டமிட்டு ஹர்தி பாண்டியா வீழ்த்தியது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ரோகித் சர்மா சூப்பர்மேன் செலிபிரேஷனை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. ஆன்டிகுவா மைதானத்தில் 180 ரன்கள் சேர்ப்பதே கடினமாக பார்க்கப்பட்ட நிலையில், 196 ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை படைத்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 50 ரன்களை சேர்த்தார்.

இதன்பின் வங்கதேசம் அணி தரப்பில் லிட்டன் தாஸ் - தான்சித் ஹசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நிதானமாக விளையாடிய இருவரும், பும்ராவிடம் விக்கெட் கொடுக்கக் கூடாது என்று கவனமாக இருந்தனர். இதன்பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், அக்சர் படேல் வீசிய 4வது ஓவரிலும் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதனால் இந்திய அணிக்கு விக்கெட் தேவை என்ற நிலை உருவாகியது. கடந்த டி20 உலகக்கோப்பையில் லிட்டன் தாஸ் ஆடிய அதிரடி ஆட்டம் கண்மூடி வந்து செல்ல, ரசிகர்கள் பதற்றமாகினர். அப்போது ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. இந்த ஓவரின் 2வது பந்தில் லிட்டன் தாஸ் அசத்தலாக ஒரு சிக்சரை விளாசி மிரட்டினார்.
இதன்பின் உஷாரான ஹர்திக் பாண்டியா, கேப்டன் ரோகித் சர்மாவை அழைத்து காற்று வீசும் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்த வேண்டும். இதனால் டீப் ஸ்கொயர் லெக் திசைக்கு சூர்யகுமார் யாதவ் கொண்டு வரப்பட்டார். இதன்பின் 3வது பந்தை ஹர்திக் பாண்டியா கொஞ்சம் ஒய்டாக வீச, அதனை ஸ்டெப் எடுத்து வைத்து லிட்டன் தாஸ் சிக்சர் அடிக்க சரியாக லெக் சைட் திசைக்கு அடித்தார்.
அது சரியாக சூர்யகுமார் யாதவ் கைகளில் சென்று விழுந்தது. ஹர்திக் பாண்டியாவின் யோசனையால் உற்சாகமான ரோகித் சர்மா, வழக்கத்திற்கு மாறாக சூப்பர்மேன் செலிபிரேஷன் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கேப்டனும், துணைக் கேப்டனும் இணைந்து முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.