டெல்லி: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடி வெற்றி பெற்று இருந்தது. அந்த போட்டியை பார்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி, "இது இந்திய அணியே இல்லை. ஐபிஎல் அணி. ஒரு ஐபிஎல் அணி தான் வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது." எனக் கூறி இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் முக்கிய வீரர்கள் சிலர் டெஸ்ட் அணியிலும் இடம் பெற்று இருப்பதால் அவர்கள் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை, அவர்களுக்கு பதிலாக வேறு சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் டி20 அணியில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ரியான் பராக், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என பலருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதை தான் பாஸித் அலி இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "இது ஐபிஎல் 11 அணி. இந்திய அணியே இல்லை. வங்கதேச அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட், ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடவில்லை. ஆனாலும், வங்கதேசத்தை வெறும் 11 ஓவர்களில் இந்திய அணி வீழ்த்தி விட்டது. அதிலும் ஹர்திக் பாண்டியா சிக்ஸ் அடித்து சேஸிங்கை முடித்தார்." என்றார்.
மேலும், "இந்த வங்கதேச அணி தான் பாகிஸ்தானை 2 - 0 என டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்ததா? இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் நாம் பார்த்தோம். வங்கதேச அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் அந்த அணி வீழ்த்தப்பட்டது. மழையால் கூட வங்கதேச அணியை காப்பாற்ற முடியவில்லை. இந்திய அணி தனது ஆதிக்கத்தின் மூலம் கிரிக்கெட்டையே மாற்றி விட்டது. வங்கதேச அணி இந்தியாவுக்கு கிடைத்த நல்ல தீனி." என்றார் பாஸித் அலி.