ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் வழக்கம் போல் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய சஞ்சு சாம்சன், 2வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் விளாசி அதிரடிக்கு திரும்பினார்.
பின்னர் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் கூட்டணி இணைந்தது. அந்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் சிக்ஸ், பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். மறுபக்கம் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் சஞ்சு சாம்சனும் சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து கட்டினார். 4.2 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது.

தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய தன்ஜிம் ஷகிப் பௌலிங்கில் ஹாட்ரிக் பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்களை சூர்யகுமார் யாதவ் விளாசினார். பின்னர் ரிஷாத் ஹொசைன் பந்தில் 4, 4, 6 என்று விளாசிய சஞ்சு சாம்சன், 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் 7.1 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. பின்னர் ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் சஞ்சு சாம்சன் 6, 6, 6, 6, 6 என்று ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசினார்.
மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் கடக்க, சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தை விளாசி சாதனை படைத்தார். இதன் காரணமாக 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 190 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 75 ரன்களுடன் வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா - ரியான் பராக் கூட்டணி இணைந்தது. தன்ஜிம் ஷகிப் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் மெஹதி ஹசன் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.
தொடர்ந்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் 15 ரன்களும், 19வது ஓவரில் ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரை வீச தன்ஜிம் ஹசன் அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் 2வது பந்தில் சிக்ஸ் பறக்க, 3வது பந்தில் ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் நிதிஷ் ரெட்டி டக் அவுட்டாகி வெளியேற, இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி மொத்தமாக 22 சிக்ஸ், 25 பவுண்டரிகள் விளாசியுள்ளது. இதன் மூலமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது. ஆசியப் போட்டிகளில் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் அணி 314 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.