
டாஸ் வெற்றி
வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அது அந்த அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இந்தியா பந்துவீச்சில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

வங்கதேசம் சரிவு
வங்கதேச அணியில் கேப்டன் மொமினுல் ஹக் 37, முஷ்பிகுர் ரஹீம் 43, லிட்டன் தாஸ் 21 ரன்கள் குவித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். ஒரு வீரர் கூட அரைசதம் தாண்டவில்லை.

இந்தியா பந்துவீச்சு
58.3 ஓவர்களில் வங்கதேசம் 150 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இஷாந்த் சர்மா 2, உமேஷ் யாதவ் 2, அஸ்வின் 2, ஷமி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்
அடுத்து பேட்டிங் ஆடத் துவங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர், மயங்க் அகர்வாலுடன் இணைந்து புஜாரா 54 ரன் குவித்தார். கோலி டக் அவுட் ஆனார்.

மயங்க் அகர்வால் அபாரம்
ரஹானே தொடர்ந்து சிறப்பாக ஆடி 86 ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வால் சதம் கடந்து, பின்னர் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 60, உமேஷ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் இன்னிங்க்ஸ்
இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த நாள் காலை டிக்ளர் அறிவித்தது. வங்கதேசம் 343 ரன்கள் பின்தங்கி இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது கடினம் என்றே கருதப்பட்டது.

வங்கதேசம் போராட்டம்
இரண்டாம் இன்னிங்க்ஸில் வங்கதேச அணியின் சில வீரர்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் ரஹீம் 64, லிட்டன் தாஸ் 35, மெஹிதி ஹாசன் 38 ரன்கள் எடுத்தனர். இந்த சிறிய அளவிலான போராட்டம் வங்கதேசம் அணியை 200 ரன்கள் தாண்ட மட்டுமே உதவி செய்தது.

இன்னிங்க்ஸ் வெற்றி
வங்கதேசம் 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தொடரின் கடைசி இரு போட்டிகளிலும் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷமி மிரட்டல்
இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் ஷமி மிரட்டினார். அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின் 3, உமேஷ் 2, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து தன் ஆறாவது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா.

ஆட்டநாயகன் யார்?
இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இவர் இரட்டை சதம் அடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











