சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்றனர். ஆனால், அதில் பெரும்பாலானவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
அவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் துலீப் ட்ராபியில் அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. துலீப் ட்ராபி தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் சுப்மன் கில் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் இன்னிங்க்ஸில் 25 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களும் எடுத்துள்ளார்.

அடுத்து அதிரடி துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்க்ஸ்களில் மொத்தம் 39 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். கே எல் ராகுல் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 94 ரன்கள் சேர்த்துள்ளார். இது நல்ல ஸ்கோர் தான் என்றாலும் முதல் இன்னிங்ஸில் 111 பந்துகளை சந்தித்து வெறும் 37 ரன்கள் மட்டும் எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எனினும், அவர் இரண்டாவது இன்னிங்க்ஸில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
மிடில் ஆர்டரில் ஆடும் சர்ஃபராஸ் கான் 9 மற்றும் 46 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு இன்னிங்க்ஸில் 61 ரன்கள் சேர்த்து இருந்தார். மேலும், விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியில் 7 கேட்ச்களை அவர் பிடித்து இருந்தார். இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ள துருவ் ஜுரல் மொத்தமே இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் முதல் இன்னிங்க்ஸில் 86 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 28 ரன்களும் எடுத்து இருக்கிறார். முதல் போட்டியில் அவர் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியில் நான்காவது ஸ்பின்னராக இணைந்துள்ள குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
மேலும், அவர் ஒரு ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். இப்படி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடவில்லை என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது. அனுபவம் மிக்க வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.
அவர்கள் போதிய பயிற்சி இல்லாமல் நேரடியாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அவர்கள் வலை பயிற்சியில் மட்டுமே ஈடுபட உள்ளனர். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக முடியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. துலீப் ட்ராபியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணி வீரர்களில் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் மட்டுமே பாரட்டும்படி செயல்பட்டு உள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி துவங்கி நடைபெறும்.