இது டெஸ்ட் மேட்ச்சே இல்லை.. இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. 6 ஓவரில் 51 ரன்.. ஆடிப்போன வங்கதேசம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்திய அணி தடுமாறியது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் கச்சிதமாக திட்டமிட்டு வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தது இந்திய அணி. அதிலும் ஒரு கட்டத்தில் 6 ஓவரில் 51 ரன்கள் குவித்து மிரள வைத்தது சுப்மன் கில் - ரிஷப் பண்ட் ஜோடி.
இது டெஸ்ட் போட்டியா? அல்லது ஒருநாள் போட்டியின் கடைசி 10 ஓவர்களா? என சந்தேகப்படும் அளவுக்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்தனர். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்து இருந்தனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே எல் ராகுல் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் மோசமாக ஆடி விக்கெட்டை இழந்து சொதப்பி இருந்தனர். அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் துவங்கியது. முதல் இன்னிங்ஸின் முடிவில் 227 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, 500 ரன்களுக்கும் அதிகமாக வங்கதேச அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்க திட்டமிட்டது.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10 மற்றும் விராட் கோலி 17 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடினர். மூன்றாம் நாள் துவக்கத்திலிருந்து அவர்கள் இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடித்து வந்தனர்.
மதிய இடைவேளையை நெருங்கிய போது இருவரும் தங்கள் வேகத்தை அதிகரித்தனர். உணவு இடைவேளைக்கு முந்தைய 6 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 51 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்திய அணி நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது. எப்போதும் உணவு இடைவேளைக்கு பின் விக்கெட் வீழ்ச்சி இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே அதிரடியாக ஆட வேண்டும் என்ற திட்டத்தை இந்திய அணி கையில் எடுத்தது.
அதன்படி ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் சிக்ஸர்களை அடித்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி 205 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது சுப்மன் கில் 86 ரன்கள் எடுத்தும், ரிஷப் பண்ட் 82 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின் விரைவாக 500 ரன்கள் முன்னிலையை எட்ட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ரிஷப் பண்ட் விரைவாக ஆடி தனது ஆறாவது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். அவர் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் சுப்மன் கில் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அவர் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் ராகுல் 19 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து இருந்தார். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அப்போது இந்திய அணியின் ரன் ரேட் 4.48 ஆக இருந்தது. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இன்னும் மூன்றாம் நாளின் பாதி ஆட்டம் மற்றும் கடைசி இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் வங்கதேச அணி இந்த போட்டியை டிரா செய்வது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் வெற்றிக்காக ஆட வேண்டும் அல்லது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications