மும்பை: கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் வாய்ப்பு இன்றி தவித்து வரும் இஷான் கிஷன் தற்போது புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக சதம் அடித்து இருக்கிறார். இந்த நிலையில், அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால், இந்தியா அணியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பே கிடைக்காது. அவர் இனி ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி. வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் நடக்கும் துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் தேர்வாகி இருக்கிறார் இஷான் கிஷன்.

புச்சி பாபு தொடரில் சிறப்பாக ஆடி இருக்கும் அவர், துலீப் டிராபி தொடரிலும் ரன் குவிக்கும் பட்சத்தில் அவருக்கு வங்கதேச டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது. அவர் என்னதான் ஆடினாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என பாஸித் அலி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷனுக்கு தற்போது போட்டி அதிகரித்து இருக்கிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலுக்கும் இனி இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை உள்ளது.
இந்த காரணங்களால் இஷான் கிஷனுக்கு குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை இந்திய அணியில் இடம் கிடைக்காது என கூறி இருக்கிறார் பாஸித் அலி. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகம்தான் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
"இஷான் கிஷன் இனி ஐபிஎல் தொடரில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை அவர் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை. என்னை கேட்டால், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன் பின் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்." என்றார் பாஸித் அலி.
ரிஷப் பண்ட்டுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு ஆட முடியாத சூழ்நிலை வந்தால் மட்டுமே இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை தான் பாஸித் அலி இவ்வாறு சுட்டி காட்டி இருக்கிறார்.