மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் யார் என்றால் அது ரிஷப் பண்ட் தான். ரிஷப் பண்ட் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். ஆனால் இதுவரை ஆறு சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் விளையாடி ரிஷப் பண்ட் சதம் அடித்திருக்கிறார். இதனால் ஆல் டைம் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது ரிஷப் பண்ட் தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ரிஷப் பண்ட் பெரிய விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் தற்போது தான் அவர் மீண்டும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பியிருக்கிறார். இந்த சூழலில் ரிஷப் பண்ட் தான் மிகச்சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் என்று சொல்வது நியாயம் கிடையாது என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் வெறும் 34 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடிருக்கிறார். ஆனால் அதற்குள் அவரை இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட் கீப்பர் என்று பலரும் பாராட்டி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை அவர் அடைய வேண்டும் என்றால் நிச்சயம் இன்னும் நேரம் எடுக்கும்.
ஆனால் அதற்குள் அவர்தான் மிக சிறந்தவர் என்ற கருத்துக்குள் நாம் வர முடியாது. கண்டிப்பாக மிகச்சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெறுவதற்கான வழியில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருக்கிறார். பண்ட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது வேண்டுமானால் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறலாம்.
ஆனால் தற்போது வரை தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி விக்கெட் கீப்பராக செய்த விஷயங்களை யாரும் மறந்து விட வேண்டாம். அவர் விக்கெட் கீப்பிங் மட்டும் பிரமாதமாக செய்யவில்லை. இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் முக்கிய கட்டத்தில் அவர் பேட்டிங் செய்து ரன்களை குவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் முன் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வந்து அதற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் செங்கோல் விருதை வாங்கி இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.தோனி இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 33 அரை சதம் அடங்கும். ஆனால் ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2419 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதமும், 11 அரை சதமும் அடங்கும்.